சவுதி அரேபியா பயணத்தை பாதியிலேயே முடித்து நாடு திரும்பினார் பிரதமர் மோடி!
ஜம்மு காஷ்மீரின் பைசரன் சுற்றுலா தளத்தில் ராணுவ சீருடையில் வந்து தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 28 சுற்றுலா பயணிகள் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், சவூதி பயணத்தை பாதியிலேயே முடித்து பிரதமர் மோடி நாடு திரும்பினார். காஷ்மீரின் தெற்குப் பகுதியில் உள்ள பஹல்காமை அடுத்த பைசரன் பள்ளத்தாக்குப் பகுதியில் இயங்கி வரும் ரிசார்ட்டில், பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் புல்வெளியில் குதிரை சவாரி உள்ளிட்ட கேளிக்கைகளில் நேற்று ஈடுபட்டனர்.
அப்போது, அங்கு நுழைந்த தீவிரவாதிகள் சுற்றுலா பயணிகள் மீது ஈவு இரக்கமே இல்லாமல் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்தக் கொடூரத் தாக்குதலில் வெளிநாட்டினர் 2 பேர் உள்ளிட்ட 28 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தக் கோரத் தாக்குதலில் இந்திய கடற்படையைச் சேர்ந்த அதிகாரி, ஐதராபாத் உளவுப் பிரிவு அதிகாரி உள்ளிட்டோரும் கொல்லப்பட்டனர்.
பிகாரைச் சேர்ந்த உளவுத்துறை அதிகாரி மணீஷ் ரஞ்சன் தனது குடும்பத்துடன் காஷ்மீர் சுற்றுலா சென்ற நிலையில் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். பிகாரிலிருந்து மணீஷ் ரஞ்சன் பணிமாறுதல் பெற்று ஐதராபாத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், விடுமுறையையொட்டி குடும்பத்துடன் காஷ்மீர் சுற்றுலா சென்றார். சுற்றுலா சென்ற இடத்தில் தீவிரவாதிகளால் குடும்பத்தினர் முன்னிலையில் பரிதாபமாக சுட்டுக் கொல்லப்பட்டார்.
மேலும், துப்பாக்கிச் சூடு சம்பவத்தை அடுத்து பாதுகாப்புப் படையினர் நடத்திய பதில் தாக்குதலில் ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டதாகவும் தேடுதல் வேட்டை தொடர்வதாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது. சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட இந்தக் கொடூரமான தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.இதற்கிடையே, சென்னையைச் சேர்ந்த டாக்டர் பரமேஸ்வரம் என்பவர் காயமடைந்தார்.
இதேபோல, தமிழ்நாட்டைச் சேர்ந்த சந்துரு, பாலச்சந்திரா ஆகியோரும் காயமடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகா உள்ளிட்ட தென் மாநிலங்களைச் சேர்ந்த 9க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் படுகாயம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேரில் ஆய்வுசெய்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.
ஜம்மு காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தாக்குதல் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடர்புகொண்டு கேட்டறிந்த பிரதமர், தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அமித் ஷாவுக்கு உத்தரவிட்டார். இதன்படி, காஷ்மீர் விரைந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சம்பவம் நடந்த இடத்தை ஆய்வு செய்தார். மேலும், காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, முதலமைச்சர் உமர் அப்துல்லா உள்ளிட்டோருடன் அவசர ஆலோசனை நடத்தினார். அப்போது நடந்த சம்பவம் குறித்து முதலமைச்சர் விளக்கம் அளித்தார்.
இந்நிலையில், 2 நாள் பயணமாக சவுதி அரேபியாவுக்கு நேற்று சென்ற பிரதமர், தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து, தனது பயணத்தை பாதியிலேயே முடித்துக் கொண்டு அவசரமாக நாடு திரும்பினார். இதேபோல் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் தனது வெளிநாட்டு பயணத்தை பாதியிலேயே முடித்து நாடு திரும்புகிறார்.
அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், தீவிரவாதிகளைக் கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவுசெய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலைக் கண்டித்து, உள்ளூர் மக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் ஈடுபட்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




