காஷ்மீர் தாக்குதல் கொடூரமான செயல் – முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
ஜம்மு மற்றும் காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல் கொடூரமான செயல் என்று முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். காஷ்மீர் தாக்குதலில் இதுவரை 25 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஜம்மு- காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் மலைக்கு டிரக்கிங் சென்ற சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர்.
பயங்கரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டில் 25 பேர் உயிரிழந்ததுள்ளனர். மேலும் 13 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 5 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். அந்த இடத்திற்கு விரைந்துள்ள பாதுகாப்பு படையினர், பயங்கரவாதிகளை பிடிக்க தேடுதல் வேட்டையை துவக்கி உள்ளனர்.
இந்த நிலையில்,சவுதி அரேபிய சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் தொலைபேசி வாயிலாக ஆலோசனை நடத்தி உள்ளார். காஷ்மீர் தாக்குதல் குறித்தும் தற்போதைய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் கேட்டறிந்துள்ளார்.இந்த தாக்குதல் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறுகையில், “பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் ஒருபோதும் தப்பிக்க முடியாது.
அவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள். தாக்குதல் தொடர்பாக பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். அவரிடம் விளக்கமளித்துள்ளேன்“ என தெரிவித்திருந்தார். இந்நிலையில் காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்தி உள்ள தாக்குதலுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், ஜம்மு மற்றும் காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல், குற்றமற்ற சுற்றுலா பயணிகளை இலக்காக்கியதோடு பல உயிர்களை பலிகொண்டது என்பது கொடூரமான செயல்.
இந்த தாக்குதலுக்கு தீவிரமான கண்டனம் தெரிவிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுடன் எனது ஆதரவும் இரங்கலும் தெரிவித்து கொள்கிறேன்.இந்த தாக்குதலில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் இருப்பது மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க, டெல்லியில் உள்ள அதிகாரிகளுக்கு, ஜம்மு மற்றும் காஷ்மீர் அதிகாரிகளுடன் ஒருங்கிணைக்கச் கூறியுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




