தமிழ்நாடு போக்குவரத்து ஊழியர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு கட்டாயம்..!
தமிழ்நாடு போக்குவரத்து ஊழியர்களுக்கு கட்டாய பயோமெட்ரிக் வருகை பதிவு முறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இது குறித்து போக்குவரத்துக் கழகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், போக்குவரத்து பணியாளர்கள் அனைவரும் தங்கள் வருகையை கட்டாயம் பயோமெட்ரிக் மூலம் பதிவு செய்ய வேண்டுமெனவும், பயோமெட்ரிக் வருகை பதிவு முறையானது அனைத்து அலுவலகங்கள் மற்றும் டிப்போக்களில் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தலைமை அலுவலகம், அனைத்து பணிமனைகள், தொழிற்கூடங்கள் உள்ளிட்டவற்றில் பணிபுரியும் ஓட்டுநர்கள், நடத்துநர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள், அலுவலக பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் பயோமெட்ரிக் மூலமாகவே வருகையை பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஊழியர்கள் விரல் ரேகை அல்லது ஆதார் உள்ளிட்ட பயோமெட்ரிக் தகவல்களை பயன்படுத்தி வருகையை பதிவு செய்ய வேண்டும் எனவும், பயோமெட்ரிக் முறையில் வருகையை பதிவு செய்யாத ஊழியர்களின் வேலை நாள்கள் கணக்கிலிருந்து நீக்கப்படலாம் அல்லது, சம்பளக் கழிவு போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் எனவும் அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




