--- --:--:-- --

10 மசோதாக்களை ஆளுநர் நிறுத்தி வைத்தது சட்ட விரோதம் – உச்சநீதிமன்றம்

1

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரிடம் நிலுவையில் இருந்த 10 மசோதாக்களுக்கும் உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்து, ஆளுநர் நிறுத்தி வைத்தது சட்டவிரோதம் எனக்கூறி தீர்ப்பளித்துள்ளது.

 

தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்து நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்காக ஆளுநருக்கு மீண்டும் அனுப்பப்படும் மசோதாக்களுக்கு அவர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டு வருவதாகவும், பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களின் நியமன விவகாரத்தில் ஆளுநரின் தலையீடு அதிகரிப்பதாகவும் கூறி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்குகளைத் தாக்கல் செய்தது.

 

இந்த விவகாரத்தில் ஆர்.என். ரவிக்கு எதிராக தமிழ்நாடு ஆளுநர் என்ற அடிப்படையில் ஒரு வழக்கையும், பல்கலைக்கழகங்களின் வேந்தர் என்ற அடிப்படையில் ஒரு வழக்கையும் என இரண்டு வழக்குகளை தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.இந்த வழக்குகள் மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதிகள் பர்திவாலா மற்றும் மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

 

கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற நான்கு நாட்கள் தொடர் இறுதி விசாரணைக்குப் பிறகு பிப்ரவரி 10-ஆம் தேதி வழக்கின் தீர்ப்பை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. அப்போது உச்சநீதிமன்றம், “சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் மீதான ஆளுநரின் செயல்பாடு ஏற்புடையதல்ல” எனத் தெரிவித்தது.

 

இதுமட்டுமின்றி, சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாவை நிறுத்தி வைக்கும் முடிவு அல்லது குடியரசுத் தலைவருக்கு அனுப்பும் முடிவை, ஆளுநர் ஒரு மாதத்தில் எடுக்க வேண்டும் என்றும், அமைச்சரவையின் முடிவுக்கு எதிராக அந்த மசோதாவைத் திருப்பி அனுப்பும் பட்சத்தில், அந்த முடிவை 3 மாதங்களுக்குள் எடுக்க வேண்டும் என்றும் ஆளுநருக்கான காலக்கெடுவை விதித்து உச்சநீதிமன்றம் முதல்முறையாகத் தீர்ப்பளித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon