12 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை..!
தமிழகத்தில் நீலகிரி, மதுரை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில், நெல்லையில் தச்சநல்லூர், பொட்டல், கோட்டூர், தாழையூத்து உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை அரை மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது.
இதனால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர். தென்காசி மாவட்டத்தில் வாசுதேவநல்லூர், நாராயணபுரம், திருமலாபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் அரை மணி நேரத்திற்கு மேலாக இடி மின்னலுடன் பலத்த பெய்தது. இந்த மழை விவசாயத்திற்கு உகந்ததாக இருக்கும் என்று விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
அதேபோல், மதுரை மாவட்டம் திருமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளான திருமங்கலம் நகர், பாண்டியன் நகர், வடகரை, கரிசல்பட்டி, கற்பகநகர், காமராஜபுரம், செங்குளம் பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது.விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை கொட்டித்தீர்த்து. கூமாபட்டி, கான்சாபுரம், தம்பிபட்டி , மகாராஜபுரம், கோபாலபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளான அத்திகோயில், பிளவக்கல் அணை, கோவிலாறு அணை உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பரவலாக மழை பெய்தது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பகல் நேரத்தில் வெப்பம் நிலவிய நிலையில், மாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஏரிச்சாலை, பியர் சோலா சாலை, கல்லு குழி, கவி தியாகராஜர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. இரவிலும் ஒரு மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக முக்கிய குடிநீர் ஆதாரங்களில் நீர் மட்டம் உயர்ந்து வருவதுடன் மலைப்பகுதி முழுவதும் குளுமையான சூழல் நிலவியது.
தேனியில் அல்லிநகரம், அரண்மணைப்புதூர், வீரபாண்டி, கருவேல்நாயக்கன்பட்டி, லட்சுமிபுரம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி வனப்பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை கொட்டித்தீர்த்தது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சுற்றுவட்டாரத்திலும் கனமழை பெய்தது. இந்நிலையில், நீலகிரி முதல் நெல்லை வரையிலான மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் மதுரை, சிவகங்கை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யலாம் என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் செந்தாமரை கண்ணன் தெரிவித்துள்ளார்.
நாளை மறுநாள் கோவை மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள், நீலகிரி, திண்டுக்கல், தேனி, தென்காசி, ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




