அண்ணாமலை, எச்.ராஜா மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு..!

தக்கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் எச்.ராஜா ஆகியோர் மீது சேலம் மாநகர சைபர் கிரைம் காவலர்கள் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

 

முருகனின் அறுபடை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி கோயில் மற்றும் சுல்தான் சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்கா அமைந்துள்ள திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில், “திருப்பரங்குன்றம் முழுவதும் முருகனுக்குச் சொந்தமானது” என்றும் “அங்கிருக்கும் தர்கா ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்” என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியதாகக் கூறப்படுகிறது.

 

இந்நிலையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் அக்கட்சியின் மூத்த தலைவர் எச்.ராஜா ஆகியோர் மதக்கலவரத்தைத் தூண்டும் விதமாகப் பேசியதாகவும், அவர்கள் இருவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சமூக ஆர்வலர் பியூஷ் மானுஷ் சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.

 

இதையடுத்து பியூஷ் மானுஷ் கொடுத்த புகாரின்பேரில் சேலம் மாநகர சைபர் கிரைம் காவலர்கள் அண்ணாமலை மற்றும் எச்.ராஜா மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.