--- --:--:-- --

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம்..!

1

ரபரப்பான அரசியல் சூழல்களுக்கு மத்தியில் தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் தலைமையில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தியாவில் தொகுதி மறுவரையறை தொடர்பான சிறப்பு சட்டம் அடுத்த ஆண்டு காலாவதி ஆகிறது.

 

கொரோனா காரணமாக, 2021 ஆம் ஆண்டு மக்களவை கணக்கெடுப்பு நடத்தப்படாத நிலையில், தொகுதி மறுவரையறை எப்படி நடக்கப் போகிறது என கேள்வி எழுந்துள்ளது. மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகள் வரையறுக்கப்பட்டால் தமிழ்நாட்டில் 8 தொகுதிகள் வரை குறையும் எனக் கூறப்படுகிறது.

 

மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்வதை தொடக்க நிலையிலேயே எதிர்க்க வேண்டும் என்ற நோக்கில் அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு முதலமைச்சர் அழைப்பு விடுத்திருந்தார்.அரசியல் வேறுபாடுகளையெல்லாம் ஓரமாக வைத்துவிட்டு, கவுரவம் பார்க்காமல் இந்தக் கூட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும் எனவும் முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

 

அந்த வகையில், தமிழ்நாட்டில் இருந்து தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட 45 கட்சிகளுக்கும் இன்றைய கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று காலை 10 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறவுள்ளது.

 

முதலமைச்சரின் அழைப்பை ஏற்று, அதிமுக, காங்கிரஸ், விசிக, த.வே.க உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளன. எனினும் பாஜக, தமிழ் மாநில காங்கிரஸ் போன்ற கட்சிகள் பங்கேற்கப்போவதில்லை என அறிவித்துள்ளன.அந்த வகையில், அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் திமுக சார்பில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் வில்சன் எம்.பி., ஆகியோரும் பங்கேற்கவுள்ளனர்.

 

அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், வழக்கறிஞர் இன்பதுரை ஆகியோரும் பங்கேற்பர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி சார்பில் அதன் தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் செல்வப்பெருந்தகை கலந்துகொள்ளவுள்ளனர். விசிக சார்பில் அதன் தலைவர் திருமாவளவன் மற்றும் ரவிக்குமார் எம்பி ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.

 

மதிமுக சார்பில் அதன் பொதுச்செயலாளர் வைகோ மற்றும் துரை வைகோ எம்பி ஆகியோரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், பாமக, தேமுதிக மற்றும் அமமுக சார்பில் கட்சிப் பிரதிநிதிகள் பங்கேற்பர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மக்கள் நீதி மய்யம் சார்பில் கட்சியின் தலைவர் கமல்ஹாசனும், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கட்சியின் பொருளாளர் வெங்கட்ராமனும் பங்கேற்கவுள்ளனர்.பரபரப்பான அரசியல் சூழல்களுக்கு மத்தியில் இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில் தேசிய அளவில் இது கவனம் பெற்றுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon