--- --:--:-- --

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிவிப்பு..!

2

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக மா.கி.சீதாலட்சுமி என்பவர் போட்டியிடுவதாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.

 

ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன், உடல்நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் 14-ஆம் தேதி காலமானார். ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவை அடுத்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு, பிப்ரவரி 5 ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த 2 முறையும் காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட நிலையில், இம்முறை ஆளும் திமுக நேரடியாக களமிறங்குகிறது.

 

இதையடுத்து ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெறாது எனக்கூறி ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுகவும் தேமுதிகவும் அறிவித்தன. இதே காரணத்தைக் கூறிதான் கடந்த ஆண்டு நடந்த விக்கிரவாண்டி இடைத் தேர்தலையும் அவ்விரு கட்சிகளும் புறக்கணித்தன. இதையடுத்து பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தது.

 

அதிமுக, தேமுதிக, தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் புறக்கணித்துள்ளதால், திமுக மற்றும் நாம் தமிழர் கட்சிகள் இடையிலான இருமுனைப் போட்டியாக ஈரோடு கிழக்குத்தொகுதி இடைத்தேர்தல் களம் மாறியுள்ளது.ஏற்கனவே திமுக சார்பில் வி.சி.சந்திரகுமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில், நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் குறித்து பொங்கலன்று அறிவிக்கப்படும் என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்திருந்தார்.

 

அதன்படி இன்று ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் சீதாலட்சுமி போட்டியிடுவார் என அறிவித்துள்ளார்.ஈரோடு ஓடத்துறை அருகே உள்ள மாரப்பம்பாளையத்தைச் சேர்ந்த சீதாலட்சுமி, எம்.ஏ. எம்.பில் படிப்பை முடித்தவர். 13 ஆண்டுகளாக ஆசிரியராக பணியாற்றி வந்த இவர், தற்போது கேபிள் டிவி ஆப்ரேட்டரின் உதவியாளராக பணியாற்றி வருவதாகவும் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கடந்த மக்களவைத் தேர்தலில் திருப்பூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த நிலையில், தற்போது அவருக்கு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தேர்தலின்போது அவர் வேட்பு மனுவில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தின்படி, அவரின் சொத்து மதிப்பு 99 லட்சங்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் , “வருகின்ற 05-02-2023 அன்று, தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக மா.கி.சீதாலட்சுமி போட்டியிடவிருக்கிறார் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

 

கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதி உள்ளிட்ட அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வெற்றிக்கு முழு ஒத்துழைப்பை நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.” என தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon