வன்கொடுமைக்கு மரண தண்டனை..!
தமிழ்நாட்டில் 12 வயதுக்கு உட்பட்ட பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தால் மரண தண்டனை விதிக்கும் வகையில் சட்டத்திருத்தம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பெண் பாதுகாப்பு தொடர்பான சட்டதிருத்த முன்வடிவை தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்த முதல்வர் ஸ்டாலின் இந்த சட்டத்தை அறிமுகம் செய்துவைத்தார்.
தமிழக சட்டப்பேரவையில், இன்று (ஜன.10) பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான இரண்டு சட்டத்திருத்த முன்வடிவுகளை முதல்வர் ஸ்டாலின் அறிமுகம் செய்துவைத்தார். இதன்பின் பேசிய முதல்வர் ஸ்டாலின், “பெண்களுக்கெதிரான குற்றங்கள் தொடர்பாக உரிய சட்டத் திருத்தங்களோடு இரண்டு சட்டமுன்வடிவுகளை இந்த அவையில் அறிமுகம் செய்வதற்குமுன், அவற்றின் முக்கியத்துவத்தைப் பற்றிய விவரங்களை முன்னுரையாக நான் இங்கே தெரிவிக்க விரும்புகிறேன்.
சமூகத்தின் சரிபாதியான பெண் இனத்தின் மேன்மைக்கும், வளர்ச்சிக்கும், பல்வேறு திட்டங்களை உருவாக்கித் தரும் அரசு இந்த அரசு. சமூகம், அரசியல், பொருளாதாரம் ஆகிய அனைத்து வகையிலும் பெண்களை முன்னேற்றி வரும் அரசாக செயல்பட்டு வருகிறோம். இந்த வளர்ச்சியை நாம் தினந்தோறும் அறிந்தும், உணர்ந்தும் வருகிறோம்.இதன்மூலமாக, பெண்களின் சமூகப் பங்களிப்பு அதிகமாகி வருகிறது. இத்தகைய சூழலில் பெண்களுக்குப் பாதுகாப்பான மாநிலமாக, தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது. பெண்கள் அதிகம் வேலைக்குச் செல்லும் மாநிலமாக, பெண்கள் அதிகமான சமூகப் பங்களிப்பு வழங்கும் மாநிலமாக தமிழ்நாடு வளர்ந்து வருகிறது.
அதேநேரத்தில், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்தாக வேண்டும். பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுவோர்மீது தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுத்து, சட்டப்படி அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய தண்டனைகளை வாங்கித் தருவதிலும் உறுதியோடு செயல்பட்டு வருகிறது தமிழ்நாடு அரசு.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




