ஆளுநர் மாளிகை பதிவை வைத்து விஜயை விமர்சித்த திமுக..!
பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமென ஆளுநரிடம் வழங்கிய மனுவில் தவெக தலைவர் விஜய் குறிப்பிட்டுள்ளார். அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பாக ஆளுநரை சந்தித்து தவெக தலைவர் விஜய் மனு அளித்தார். அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக ஏற்கனவே தெரிவித்திருந்த தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், திங்கட்கிழமை காலை எழுதிய கடிதத்தில், பெண்களுக்கு அண்ணனாக, அரணாக இருப்பேன் என உறுதியளித்தார்.
இதனைத் தொடர்ந்து ஆளுநர் ஆர்.என்.ரவியை விஜய் சந்தித்தார். அப்போது ஆளுநருக்கு திருக்குறள் புத்தகத்தை விஜய் வழங்கினார். விஜய்க்கு பாரதியார் கவிதைகள் புத்தகத்தை ஆளுநர் வழங்கினார்.இந்த சந்திப்புக்குப் பிறகு பத்திரிகையாளர்களை விஜய் சந்திப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஆளுநர் மாளிகையில் இருந்து வெளியே வந்த விஜய், அங்கிருந்தவர்களைப் பார்த்து கையசைத்துவிட்டு புறப்பட்டார்.
இதற்கிடையே, ஆளுநர் உடனான சந்திப்பு குறித்து தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டும் என்றும், அனைத்து இடங்களிலும் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அண்மையில் பெய்த பருவ மழை மற்றும் ‘ஃபெஞ்சல்’ புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் உரிய நிவாரணம் கிடைக்கவில்லை என ஆனந்த் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.இந்த விவகாரத்தில் மாநில அரசு கேட்கும் நிவாரணத் தொகையை மத்திய அரசு முழுமையாக வழங்க வேண்டும் என ஆளுநரிடம் தவெக வலியுறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். தங்களது கோரிக்கைகளைக் கேட்ட ஆளுநர், அவற்றைப் பரிசீலிப்பதாகக் கூறியதாகவும் ஆனந்த் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மொத்தம் 12 நிமிடங்களுக்கு நடைபெற்ற இந்தச் சந்திப்பில், விஜய் உடன் தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் மற்றும் பொருளாளர் வெங்கட்ராமன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.இதற்கிடையே, சந்திப்பு தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் ஆங்கிலம் மற்றும் தமிழில் பதிவிட்டுள்ள ஆளுநர் மாளிகை, தவெக தலைவர் விஜயை, ‘ஜோசப் விஜய்’ எனக் குறிப்பிட்டுள்ளது.
அந்தப் பதிவில், “ஆளுநரை தமிழக வெற்றிக் கழகம் தலைவர் சி. ஜோசப் விஜய் சந்தித்து, மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை கடுமையாக மோசமடைந்து வருவதாகவும் அதன் சமீபத்திய வெளிப்பாடாக அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த பாலியல் தாக்குதல் சம்பவத்தையும் குறிப்பிட்டு இவை தொடர்பாக ஆளுநரின் தலையீடு கோரி மனு அளித்தார்.” என்று தெரிவிக்கப்பட்டது.தவெக தலைவர் விஜயை, ‘ஜோசப் விஜய்’ எனக் குறிப்பிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதனைக் குறிப்பிட்டு திமுக மாணவரணியை சேர்ந்த ராஜிவ் காந்தி வெளியிட்டுள்ள பதிவில், “எது பாசிசம் தெரியுமா மதிப்புக்குரிய விஜய் அவர்களே!?. தாங்கள் ஆளுநரிடம் கொடுத்த கடிதத்தில் உங்கள் பெயர் விஜய் என்று தான் உள்ளது.ஆனால் கமலாலயத்தின் ஒரு பிரிவாக இயங்கும் தமிழ்நாட்டின் ஆளுநர் மாளிகையின் செய்தி குறிப்பில் உங்கள் பெயர் ஜோசப் விஜய் என்று உள்ளது. இது பாசிசம். பாசிசத்திற்கும் பாயாசத்திற்கும் வித்தியாசம் தெரியாத உங்களுக்கு இது தெரிய வாய்ப்பு இல்லை!!” என்று விமர்சித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




