விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞர் உயிரிழப்பு..!
புதுக்கோட்டையில் காவல்துறையினரின் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக காவல் நிலைய மரணமாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சாந்தனாதபுரத்தைச் சேர்ந்த விக்னேஸ்வரன் என்ற இளைஞரும் மேலும் 13 பேரும் போதை மாத்திரைகளையும் ஊசிகளையும் செலுத்திக் கொண்டதாக புதுக்கோட்டை காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. அவர்களை காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
காவல் நிலையத்திலிருந்து விக்னேஸ்வரனுக்கு உடல் நலம் பாதித்ததால் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் பொழுது உயிரிழந்ததாக கூறப்படுகிறது. விக்னேஸ்வரனை விசாரணைக்கு அழைத்து சென்ற பொழுது உயிரிழந்து விட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர். இந்த சம்பவத்தை காவல் நிலையம் மரணம் என குறிப்பிட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே விக்னேஸ்வரனின் உடலில் காயங்கள் எதுவும் உள்ளதா என குற்றவியல் நீதிமன்ற நீதிபதி நேரடியாகவும் எக்ஸ்ரே மூலமும் ஆய்வு செய்தார். பின்னர் உடற்கூறு ஆய்வு நடைபெற்ற நிலையில் விக்னேஸ்வரனின் உறவினர்கள் ஐந்து பேரிடமும் சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரிகளிடமும் நீதிபதி விசாரணை நடத்தி தனித்தனியாக வாக்குமூலம் பெற்றார்.
வாக்குமூலங்களின் அடிப்படையிலும் பிரேத பரிசோதனையின் முடிவுகளின் அடிப்படையில் இந்த வழக்கின் அடுத்த கட்டம் இருக்கும் என போலீசார் தரப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தை பொறுத்தவரையில் விக்னேஸ்வரனுக்கு ஏற்கனவே மஞ்சள் காமாலை, சிறுநீரக பாதிப்பு கல்லீரல் உள்ளிட்ட பாதிப்புகள் இருந்துள்ளதாகவும் போதை மாத்திரைக்கு அடிமையான இவருக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு போதை தடுப்பு மறுவாழ்வு சிகிச்சை மையத்தில் அவரது உறவினர்கள் சிகிச்சை அளித்துள்ளனர் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





