முன்னாள் எம்எல்ஏ கோவை செல்வராஜ் மாரடைப்பால் மரணம்..!

முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 66. காங்கிரஸ் கட்சியில் பணியாற்றியபோது சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர் கோவை செல்வராஜ்.

 

கடந்த 1991-96 இல் மறைந்த முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சிக் காலகட்டத்தில் காங்கிரஸ் எம்எல்ஏவாக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்டு பல்வேறு ஊடக விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்று பிரபலமடைந்தார்.

 

அதிமுக செய்தித் தொடர்பாளராக இருந்த கோவை செல்வராஜ், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக பிரிந்ததில், ஓ.பி.எஸ் பக்கம் நின்றார். ஓ.பி.எஸ்ஸுக்கு ஆதரவாக செயல்பட்ட அவருக்கு, ஓ.பி.எஸ் அணியின் கோவை மாவட்ட செயலாளராக அறிவிக்கப்பட்டார். பின்னர் ஓ.பி.எஸ் அணியில் இருந்தும் விலகினார்.

 

இதனைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கோவை செல்வராஜ் திமுகவில் இணைந்தார். அதன்பின்னர் திமுக செய்தி தொடர்பாளராக பல்வேறு விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

 

இந்த நிலையில் தனது 3-வது மகனின் திருமணத்துக்காக திருப்பதி சென்ற கோவை செல்வராஜுக்கு, திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவரை உறவினர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற சூழலில், அவர் வரும் வழியிலேயே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

 

நாளை காலை அவரது உடல் கோவை கொண்டு வரப்பட இருக்கிறது. கோவையில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கோவை செல்வராஜ் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

 

அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், “முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், திராவிட முன்னேற்றக் கழக செய்தித் தொடர்பு துணைச் செயலாளருமான கோவை செல்வராஜ் திடீரென்று மரணமடைந்தார் என்ற செய்தி கேட்டு பேரதிர்ச்சிக்குள்ளானேன். அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

திராவிட முன்னேற்றக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டு, கழகத்தின் கொள்கைகளை, கருத்துகளை விவாதங்களிலும், மேடைப் பேச்சுகளிலும் ஆணித்தரமாக எடுத்து வைத்தவர்.சமீபத்தில் நான் கோவை சென்றிருந்த போது, அங்கு அனைத்து நிகழ்ச்சிகளிலும் ஆர்வத்துடன் பங்கேற்ற அவர், நிகழ்ச்சி நிறைவு பெற்றதும் என்னைச் சந்தித்து, “நிகழ்ச்சி மிகச் சிறப்பாக அமைந்திருந்தது” என்று நெஞ்சாரப் பாராட்டிவிட்டு “மகனின் திருமணத்தை வைத்திருக்கிறேன். திருமணம் முடிந்து மணமக்களுடன் வந்து தங்களிடம் சென்னையில் வாழ்த்து பெறுகிறேன்” என்றார்.

 

ஆனால் இன்று மகனின் திருமணம் நடந்தேறி வந்து கொண்டிருந்தபோதே, அவருக்குத் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார் என்ற செய்தி, என்னை ஆழ்ந்த வேதனையிலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தியது. கோவை செல்வராஜை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் கழகத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும். ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” எனக் கூறியுள்ளார்.