கரையை கடந்தது காற்றழுத்த தாழ்வு மண்டலம்..!
தென் கிழக்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி கடந்த 15-ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. காற்றின் திசை வேகமாறுபாடு காரணமாக ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புதுச்சேரி – ஆந்திர மாநிலம் நெல்லூர் இடையே இன்று கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
மேலும், தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் வங்க கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிய நிலையில், காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரை கடக்கும்போது சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்றும் வானிலை மையம் சொல்லியிருந்தது.
இந்த நிலையில், வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்றிரவு 11.30 மணியளவில் சென்னையில் இருந்து கிழக்கு, வடகிழக்கில் 80 கிலோமீட்டர் தொலைவில் இருந்தது. இது மணிக்கு 22 கிலோ மீட்டர் வேகத்தில் மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து வந்தது. இது வட தமிழ்நாடு – தெற்கு ஆந்திர கடற்கரை இடையே சென்னைக்கு வடக்கே இன்று காலை கரையை கடந்தது.
அதிகாலை 4.30 மணி அளவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்ததாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. புதுச்சேரி – நெல்லூர் இடையே வட சென்னை அருகே கரையை கடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




