அம்மா உணவகங்களில் இன்றும் நாளையும் இலவச உணவு
சென்னையில் இன்றும் நாளையும் அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதீத கனமழை பெய்யும் எனவும் வானிலை மையம் எச்சரித்திருந்தது.
மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை காலை சென்னை அருகே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், இன்றும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில், “நேற்று அதிக அளவில் பெய்த வடகிழக்குப் பருவமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், அனைத்து நிவாரணப் பணிகளும் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தாழ்வான பகுதிகளில் வாழும் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் இதர உதவிகள் பெருநகர சென்னை மாநகராட்சியால் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், சென்னை மாநகரத்தின் மற்ற பகுதிகளில் வாழக்கூடிய ஏழை – எளிய மக்கள் உணவு அருந்தக்கூடிய அம்மா உணவகங்களிலும், இன்றும் நாளையும் இலவசமாக உணவு வழங்கப்படும்” என பதிவிட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




