--- --:--:-- --

திருப்பூரில் நாட்டு வெடிகுண்டு வெடித்து வீடுகள் கடும் சேதம்..உடல் சிதறி மூவர் பலி..!

12

திருப்பூர், பி.என் ரோடு, பாண்டியன் நகர் கிழக்கு, பொன் அமராவதி நகரில் உள்ள சத்யா காலனியை சேர்ந்தவர் கார்த்தி. இவருக்கு சொந்தமாக வீடு உள்ளது. இவர் கோவில் விசேஷங்களுக்கு பயன்படும் பட்டாசு, நாட்டுவெடிகளை தயாரித்து கொடுத்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

 

இந்த நிலையில் இன்று பகல் 12.30 மணியளவில் திடீரென அதிக சப்தத்துடன் நாட்டு வெடிகுண்டு வெடித்து கார்த்தி வீடு அருகில் இருந்த மளிகை கடை முற்றிலும் இடிந்து தரைமட்டமாக சேதம்டைந்தது. அந்த கட்டடத்துக்குள் எட்டு நபர்கள் இருந்துள்ளனர்.

 

அதில் 3 பேர் குழந்தைகள். வெடித்த இடத்தில் 3 அடி பள்ளம் இருந்தது. அதன் அருகிலேயே 15க்கும் மேற்பட்ட தேங்காய் மட்டை அளவில் நாட்டு வெடிகுண்டுகள் வெடிக்காமல் இருந்தன. முதலில் சிலிண்டர் வெடித்து தான் விபத்து ஏற்பட்டது என அப்பகுதி மக்கள் நினைத்து அந்த பகுதிக்கு ஓடோடி வந்தனர்.

 

ஆனால் நிலைமையை அறிந்து துரிதமாக மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கிடந்த நாட்டு வெடிகுண்டுகளை பார்த்து பொதுமக்கள் பயந்து அங்கிருந்து வெளியேறினர். வெடி விபத்து நடந்த போது மாடியில் காயப் போட்டிருந்த துணி தீப்பிடித்து எரிந்தது.

உடனடியாக இது குறித்து வடக்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர் அவர்கள் வந்து தீயை அணைத்து, பின்னர் காயம்பட்டவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் வெடிக்காத நாட்டு வெடிகுண்டுள் மீது தண்ணீரை பாய்ச்சி அடித்தனர்.

 

இதனால் மேற்கொண்டு நாட்டு வெடிகுண்டுகள் வெடிக்காமல் தடுக்கப்பட்டது. இந்த நிலையில் அங்கு மளிகை கடையில் இருந்த ஒருவரது உடல் முழுவதும் பீஸ் பீஸ் ஆகி சிதறியது. இதில் அவருடைய தலை 3 வது வீதியிலும், அவரது கை அங்குள்ள 3 வது மாடியிலும், அவருடைய மூளை 2 வது வீதியிலும் சிதறி கிடந்தது.

 

அதே போல் அடையாளம் தெரியாத பெண்ணும், 9 மாத குழந்தையும் கருகி இறந்து கிடந்தனர். வெடி விபத்து நடந்த இடத்திற்கு எதிரில் இருந்த லைன் வீடுகள் அடங்கிய ஓட்டு வீடுகளின் மேற்கூரையில் போடப்பட்டு இருந்த ஓடுகள் வெடி விபத்தினால் ஏற்பட்ட அதிர்வில் உடைந்து சிதறின.

இதனால், வேலைக்கு போகாமல் வீட்டில் பெரியவர்கள், குழந்தைகள் என 20 க்கும் மேற்பட்டோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் அனைவரும் ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மேலும்,விபத்து நடந்த பொழுது அந்த பகுதியில் ரோட்டில் நிறுத்தி இருந்த 15 க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் பலத்த சேதம் அடைந்தது.

 

இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், விபத்து ஏற்பட்ட அந்த இடிபாடுகளிடையே எந்த காயமும் இன்றி ஒரு நாய்க்குட்டி மீட்கப்பட்டது தான். இது குறித்து தகவல் அறிந்ததும் திருப்பூர் மாநகர மேயர் தினேஷ்குமார், வடக்கு எம்.எல்.ஏ., விஜயகுமார் மற்றும் அரசியல் பிரமுகர்கள் நேரில் வந்து பார்வையிட்டதுடன், மருத்துவ மனைக்கு சென்றும் விசாரித்து ஆறுதல் கூறினர்.

 

இதுகுறித்து திருமுருகன்பூண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை செய்து வருகிறார்கள். சம்பவ இடத்திற்கு திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ், திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் லட்சுமி உள்பட போலீஸ் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் வந்து விசாரணை செய்து வருகிறார்கள். மேலும் சம்பவ இடத்தை சுற்றிலும் 100 மீட்டர் தூரத்திற்கு போலீசார் தங்கள் கஸ்டடிக்கு கொண்டு வந்து அங்கு பலத்த பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர்.

இந்த விபத்து எப்படி நடந்தது? நாட்டு வெடிகுண்டு எப்படி தயாரிக்கப்பட்டது? உள்ளிட்டவை குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வெடி விபத்து நடந்த வீட்டில் இருந்தவர்கள் அனைவருமே வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்று முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

நேற்று தான் திருப்பூர் மாநகர ஒருங்கிணைந்த கமிஷனர் அலுவலகம் திறக்கப்பட்ட நிலையில் இந்த சம்பவம் போலீசாருக்கு அதிர்ச்சியையும், வேதனையையும் அளித்துள்ளது. இந்த நிலையில் இந்த விபத்து குறித்த தகவல்கள் பரவ ஆரம்பிக்க திருப்பூரின் பல்வேறு பகுதியில் இருந்த பொது மக்கள் அந்த பகுதியில் குவிந்தனர்.
இதனால் பி.என் ரோடு பாண்டியன் நகர் பகுதி பரபரப்பாக உள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon