விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் இடைத்தேர்தலையொட்டி வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. அங்கு போட்டியிடும் வேட்பாளர்கள் காலையிலேயே தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.
விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ புகழேந்தி காலமானதையடுத்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா, பாமக வேட்பாளர் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா உள்பட மொத்தம் 29 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு வெயில் காரணமாக பிற்பகலில் மந்தமாக இருந்த நிலையில் மாலையில் விறுவிறுப்படைந்தது. வெயில் சாய்ந்து வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் விநியோகிக்கப்பட்டுள்ளது. அவர்கள் வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
முன்னதாக, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ஜனநாயக கடமையை ஆற்றுவதற்காக, திருமணம் நடந்து முடிந்த கையோடு கணவருடன் வந்து மணமகள் வாக்களித்தார். விக்கிரவாண்டி வி.சாலை அரசு ஆதிதிராவிடர் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச் சாவடியில் மாற்றுத்திறனாளி பெண் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.
ஆட்டோவில் வந்த மாற்றுத்திறனாளியான சிந்துவை, வீல் சேரில் அழைத்துச் செல்ல யாரும் இல்லாத நிலையில், முட்டிபோட்டு சென்று தனது வாக்கினை பதிவு செய்தார். அவர் முதன்முறையாக வாக்களித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எந்த இடையூறும் இன்றி தங்கள் வாக்குகளை பதிவு செய்ததாக வாக்காளர்கள் தெரிவித்தனர். முன்னதாக 6 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாக வாக்குப்பதிவு ஒன்றரை மணி நேரம் தாமதமானது. பின்னர், இயந்திரங்கள் சரி செய்யப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்றது.
இந்நிலையில், காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 77.73% வாக்குகள் பதிவாகி உள்ளன. மொத்தம் உள்ள 2.37 லட்சம் வாக்காளர்களில் 1.84 லட்சம் பேர் இதுவரை வாக்களித்துள்ளனர். காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் 11 மணி நேரத்தில் 77.73% வாக்குகள் பதிவாகியுள்ளது.