ரேஷன் பணியாளர்களுக்கு கூட்டுறவுத்துறை எச்சரிக்கை!
நியாயவிலைக் கடைகளின் பணியாளர்கள் நேரத்தை முறையாக கடைபிடிக்க வேண்டும் எனவும், கடைபிடிக்காத பணியாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூட்டுறவுத்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
நியாய விலை கடைகளை உரிய நேரத்தில் திறக்க பணியாளர்களுக்கு அரசு ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளது. இருப்பினும், சில நியாயவிலைக் கடைகளை உரிய நேரத்தில் திறப்பதில்லை என புகார்கள் பெறப்படும் நிலையில், பல்வேறு அதிரடி உத்தரவுகளை கூட்டுறவுத்துறை பிறப்பித்துள்ளது.
குறிப்பாக, சென்னை மற்றும் புறநகரில் காலை, 8:30 மணி முதல் பிற்பகல் 12:30 மணி வரையும்; பிற்பகல், 3:00 மணி முதல் இரவு 7:00 மணி வரையும் செயல்பட வேண்டுமென கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.மற்ற மாவட்டங்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரையும் நியாய விலைக்கடைகள் செயல்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு உரிய முறையில் பொருட்கள் வழங்க வேண்டும் எனவும், உத்தரவுகளை கடைபிடிக்காத பணியாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் கூட்டுறவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




