--- --:--:-- --

தமிழ்நாடு அமைச்சரவையில் அதிரடி மாற்றம்… மீண்டும் அமைச்சரானார் பொன்முடி..!

1

மிழ்நாடு அமைச்சரவையில், அமைச்சராக பொன்முடி மீண்டும் பதவி ஏற்க இருக்கிறார். அதற்கான அழைப்பை ஆளுநர் ஆர்.என்.ரவி தரப்பு தமிழ்நாடு அரசுக்கு அனுப்பி வைத்துள்ளது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பொன்முடியை குற்றவாளி என்று அறிவித்து தீர்ப்பளித்திருந்தது.

 

இதையடுத்து மேல் முறையீட்டுக்கு 30 நாட்கள் அவகாசமும் அந்த நீதிமன்றம் அளித்திருந்தது. இந்நிலையில் அமைச்சர் பொன்முடி உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரினார்.

 

இதனை ஏற்ற உச்சநீதிமன்றம் பொன்முடி அமைச்சராவதற்கு எந்த தடையும் இல்லை என்று தெளிவுபடுத்தியது. எனவே பொன்முடியை மீண்டும் அமைச்சராக்க தமிழ்நாடு அரசு ஆளுநர் ஆர்என்ரவிக்கு பரிந்துரை அளித்திருந்தது.

 

இதனை ஏற்க மறுத்த ஆளுநர் ஆர்.என்.ரவி, பொன்முடி குற்றமற்றவர் என்று உச்சநீதிமன்றம் கூறவில்லை என்று முதலமைச்சரின் பரிந்துரையை ஏற்க மறுத்தார். இதையடுத்து தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடுக்கப்பட்டது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வு ஆளுநர் ஆர்என் ரவியை கடுமையாக சாடியிருந்தது.

 

ஆளுநர் இப்படி நடந்துகொள்ளலாமா என்றும் சரமாரியாக கேள்விகளை எழுப்பியது. உச்சநீதிமன்ற நீதிபதிகளின் தீர்ப்பை அமல்படுத்தாமல் ஆளுநர் என்ன செய்தார் உள்ளிட்ட கேள்விகளை நீதிபதிகள் முன்வைத்தனர்.

 

இந்நிலையில் அமைச்சராக பொன்முடியை மீண்டும் பதவிப்பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் மாளிகையில் இருந்து இன்று காலை முதல் எந்த தகவலும் இல்லாமல் இருந்தது. இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு மீண்டும் விசாரணைக்கு வர இருந்த நிலையில், மறுப்பதற்கு வேறு வழியின்றி ஆளுநர் ஆர் என் ரவி, பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க அழைப்பு விடுத்துள்ளார். பகல் 3.30 மணிக்கு பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் மாளிகையில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

 

இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இன்று ஆளுநர் ஆர்.என்.ரவி கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், முதலமைச்சர், 13.3.2024 நாளிட்ட கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளபடி, முனைவர் க. பொன்முடிக்கு தமிழ்நாடு அரசின் உயர்கல்வித் துறை அமைச்சர் பொறுப்பு வழங்கிட ஒப்புதல் அளிப்பதாகவும், இன்று (22.3.2024) பிற்பகல் 3.30 மணிக்கு முனைவர் க.பொன்முடிக்கு கிண்டி ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறும் எனவும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

 

மேலும், முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்று, தற்போது அமைச்சர் காந்தி பொறுப்பில் உள்ள கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்தினை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பனுக்கு ஒதுக்கீடு செய்வதாகவும், அக்கடிதத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவிதெரிவித்துள்ளார்.

 

முன்னதாக ராஜிவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்த 7 பேர் விடுதலையின்போதும், பல மசோதாக்களை நிலுவையில் வைத்திருந்தபோதும் உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்தே ஆளுநர் ஆர்.என்.ரவி அடுத்தகட்ட உத்தரவுகளை பிறப்பித்தார். இந்த சூழலில் பொன்முடி வழக்கில் உச்ச நீதிமன்றம் கண்டிப்பான உத்தரவு பிறப்பித்த பிறகே ஆளுநர், பொன்முடியை அமைச்சராக்க அழைப்பு விடுத்துள்ளார்.

 

கடந்த காலங்களில் பல்கலைக் கழக நிர்வாகங்களில் ஆளுநர் நேரடி தலையீடு இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், ஆளுநரின் பல நிகழ்ச்சிகளில் உயர் கல்வி அமைச்சராக இருந்த பொன்முடி பங்கேற்காமல் தவிர்த்து வந்தார்.

 

இந்த சூழலில் ஆளுநருக்கும், அமைச்சர் பொன்முடிக்கும் மீண்டும் சந்திக்கும் சூழல் உண்டாகியிருப்பது தமிழ்நாடு மட்டுமின்றி தேசிய அளவில் கவனம் பெறும் அறிவிப்பாக பார்க்கப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon