--- --:--:-- --

விருதுநகர் தொகுதியில் தாமரை சின்னத்தில் ராதிகா சரத்குமார் போட்டி?

1

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார்.

 

இது தொடர்பாக அவர் விடுத்திருந்த அறிவிப்பில், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பாஜக மூத்த நிர்வாகி ஹெச்.ராஜா மற்றும் பாஜக தமிழ்நாடு பொறுப்பாளர் அரவிந்த் மேனன் ஆகியோர் தன்னிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தெரிவித்தார்.

 

தனது கட்சி நிர்வாகிகள் நாடாளுமன்றத் தேர்தலில் முடிவெடுக்கும் அதிகாரத்தை தனக்கு ஏற்கெனவே வழங்கியதன் அடிப்படையில் வரும் தேர்தலில் பாஜக கூட்டணியில் இணைந்துள்ளதாக கூறினார். மேலும், மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பிரதமராக பாஜக கூட்டணியில் போட்டியிட உள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

 

பாஜக கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் என்பது உள்ளிட்ட மற்ற விவரங்களை ஒரு வார காலத்திற்குள் அறிவிக்கவுள்ளதாகவும் சரத்குமார் தெரிவித்திருந்தார். தற்போது, நடிகையும், சரத்குமாரின் மனைவியுமான ராதிகா விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன், தாமரை சின்னத்திலேயே ராதிகா சரத்குமார் போட்டியிடுவார் என்றும் கூறப்படுகிறது.

 

திமுக கூட்டணியில் விருதுநகர் தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட வாய்ப்புள்ளது. மேலும், மாணிக்கம் தாகூர் எம்.பி., காங்கிரஸ் சார்பில் மீண்டும் அங்கு போட்டியிடுவார் என கூறப்படுகிறது. எனவே, மாணிக்கம் தாகூரை எதிர்த்து பாஜக சார்பில் ராதிகா சரத்குமார் களமிறங்க வாய்ப்புள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon