உதயநிதி ஸ்டாலின் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்..!
சனாதான ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சேகர் பாபு ஆகியோர் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து இருந்திருக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டு சனாதன தர்மத்திற்கு எதிராக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பி இருந்தது. அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர் பாபு மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா ஆகியோருக்கு எதிராக கோ வாரண்டோ வழக்கும் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், திராவிட கொள்கை எதிராக கூட்டம் நடத்த அனுமதி கேட்டு திருவேற்காட்டை சேர்ந்த மகேஷ் கார்த்திகேயன் என்பவர் சென்னை உயர்மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், சனாதான ஒழிப்பு மாநாட்டில் தமிழக அமைச்சர்கள் கலந்து கொண்டு பேசியதன் விளைவாகவே தற்போது திராவிட கொள்கைக்கு எதிராக கூட்டம் நடத்த அனுமதி கேட்டு வழக்கு தொடரக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அதிகாரத்தில் உள்ளவர்கள் பொது நிகழ்ச்சிகளில் பேசும்போது மக்களுக்குள் சாதி, மதம், மற்றும் கொள்கை ரீதியாக பிளவு ஏற்படாதவாறு கவனத்துடன் பேச வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதி, குறிப்பிட்ட கொள்கையை ஒழிக்க வேண்டும் என பேசுவதற்கு பதிலாக மது உள்ளிட்ட போதை பொருட்களை ஒழிப்பதில் அமைச்சர்கள் கவனம் செலுத்தலாம் எனவும் தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




