இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்: மத்திய அரசுக்கு ராமதாஸ் வேண்டுகோள்!
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வதும், படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மீனவர்கள் விடுவிக்கப்பட்டாலும் பல நேரங்களில் படகுகள் விடுவிக்கப்படுவதில்லை. இதனால் மீனவர்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர்.
இலங்கை கடற்படை அட்டகாசங்கள் ஒரு பக்கம் என்றால் இலங்கை கடற்கொள்ளையர்களின் கொடுமைகள் ஒரு பக்கம் மீனவர்களை துன்புறுத்துகிறது. பன்னாட்டு கடல்பாதுகாப்பு சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க மத்திய அரசு முன்வர வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த வானவன்மகாதேவி கிராமத்தைச் சேர்ந்த 9 மீனவர்கள் கோடியக்கரை அருகில் வங்கக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் சுற்றிவளைத்து கொடிய ஆயுதங்களால் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்தத் தாக்குதலில் 9 மீனவர்கள் காயமடைந்துள்ளனர். இரு படகுகள் சேதமடைந்திருக்கின்றன. அவர்களிடமிருந்து ரூ.5 லட்சம் மதிப்புள்ள மீன்பிடி கருவிகளும், பலநூறு கிலோ மீன்களும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. இலங்கை கடல் கொள்ளையர்களின் இந்த தாக்குதல் கடுமையாக கண்டிக்கத்தக்கது.
இலங்கை கடற்கொள்ளையர்களின் அட்டகாசத்தை இனியும் வேடிக்கை பார்க்காமல், அவர்கள் மீது பன்னாட்டு கடல்பாதுகாப்பு சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க மத்திய அரசு முன்வர வேண்டும். பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் அடிப்படையில் இலங்கை கடற்கொள்ளையர்களை இண்டர்போல் எனப்படும் பன்னாட்டு காவல்துறை உதவியுடன் கைது செய்து தண்டிக்க தமிழக அரசும், தமிழக காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




