சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 26 பேருக்கு வயிற்றுப்போக்கு..!

கிருஷ்ணகிரியில் பாஸ்ட்புட் கடையில் சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 26 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்ட நிலையில் சிகிச்சைக்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளியில் உள்ள சிப்காட் தொழில் பூங்காவில் டெல்டா என்கின்ற தனியார் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் 2000க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இதனடையே நேற்று நிறுவனத்தில் வேலை செய்யும் வட மாநில இளைஞர்கள் சுமார் 200 பேர் கிருஷ்ணகிரி கே தியேட்டர் சாலையில் இயங்கி வரும் சக்தி ஃபாஸ்ட் ஃபுட் கடையில் சிக்கன் ரைஸ் வாங்கி வந்து சாப்பிட்டுள்ளனர்.

 

சாப்பிட்ட சிறிது நேரத்தில் திடீரென்று ஒருவர் பின் ஒருவராக 26 பேருக்கும் வாந்தி மற்றும் வயிற்று போக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் உடனடியாக இவர்களை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கடையின் உரிமையாளரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அந்த கடையில் கிருஷ்ணகிரி மாவட்ட உணவு பொருள் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு அங்கு வைக்கப்பட்டிருந்த உணவு பொருட்களை கைப்பற்றி ஆய்வுக்காக சேலத்தில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

 

மேலும் கடையில் இருந்த உணவுப் பொருட்கள் கெட்டுப் போனதா?அல்லது சிக்கன் காலாவதியானதா? என்பது குறித்து ஆய்வு அறிக்கை வந்த பின்னர் கடை மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.