அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பிரிவதாக மனைவி டெய்சி அறிவிப்பு!
தமிழ்நாட்டு அரசின் பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்து வருகிறார் ஆதவ் அர்ஜுனா. இவர், பிரபல லாட்டரி தொழில் செய்து வரும் சாண்டியாகோ மார்டினின் மகள் டெய்சியை காதலித்து திருமணம் செய்திருந்தார். ஆதவ் அர்ஜுனா அமைச்சராக பதவியேற்ற நாளில் கூட டெய்சி விழாவுக்கு வந்திருந்தார்.
இந்த நிலையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பிரிவதாக அவரின் மனைவி டெய்சி அறிவித்துள்ளார். டெய்சி மார்ட்டின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 14 ஆண்டுகளாக ஒருவருக்கொருவர் வாழ்க்கையில் இணைந்து பயணித்தோம். அன்பு, புரிதல் மற்றும் மாற்றங்கள் நிறைந்த அந்தப் பயணத்தில், நண்பர்களாகவும், வாழ்க்கைத் துணைகளாகவும், பெற்றோர்களாகவும் வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களைக் கடந்து வந்தோம்.
இன்று, ஆதவ் அர்ஜுனாவும் நானும் பரஸ்பர உடன்பாட்டுடன் பிரிந்து, தனித்தனி பாதைகளில் பயணிக்க முடிவு செய்துள்ளோம். இது எங்கள் இருவருக்கும் ஒரு புதிய தொடக்கம் என்றாலும், எங்கள் குழந்தையைச் சிறந்த முறையில் வளர்ப்பதிலும், குழந்தையின் மகிழ்ச்சியையும் நலனையும் உறுதி செய்வதிலும் நாங்கள் தொடர்ந்து இணைந்து செயல்படுவோம்.
இதுவே எங்கள் முதன்மையான முன்னுரிமையாக இருக்கும். ஆதவ் அர்ஜுனன் மீது எனக்கு எப்போதும் மரியாதை உண்டு. அவர் மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளிலும் அவருக்கு மகிழ்ச்சியும், அமைதியும், வெற்றியும் கிடைக்க மனதார வாழ்த்துகிறேன். இந்த மாற்றமான காலகட்டத்தில், உங்கள் புரிதலையும், கனிவையும், எங்கள் தனிப்பட்ட சுதந்திரத்திற்கு மதிப்பளித்து ஒத்துழைப்பு தருமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.” என்று கூறியிருக்கிறார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




