--- --:--:-- --

ஆட்டம், பாட்டம், `தள்ளாட்டம்’! திருப்பூர் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியால் மக்கள் உற்சாகம்..!மது அருந்தி வருவோரால் பெண்கள் பாதுகாப்பு சந்தேகம்!!

4

திருப்பூர் மாநகராட்சி சார்பில், ஹேப்பி ஸ்ட்ரீட் எனப்படும் மகிழ்வான ஞாயிறு நிகழ்ச்சி, யூனியன் மில் ரோடு சக்தி தியேட்டர் பகுதியில், பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு போட்டிகளுடன் நடைபெற்றது. எனினும் பொதுமக்களுக்கு போதுமான அளவுக்கு குடிநீர் வசதி செய்து தரப்படவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. மறுபுறம் அருகேயுள்ள டாஸ்மாக் கடைகளில் `தண்ணி’ விற்பனை அமோகமாக நடைபெற்றது.

 

திருப்பூரில் ஹேப்பி ஸ்ட்ரீட் !

 

திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கடந்த முறை தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், திருப்பூர் மாநகரில் மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை, ஹேப்பி ஸ்ட்ரீட் எனப்படும் மகிழ்வான ஞாயிறு என்ற நிகழ்ச்சி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதில், பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், கும்மி, கோலாட்டம், சலங்கை ஆட்டம், சிறுவர் சிறுமிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள், ஸ்கேட்டிங் என பொழுதுபோக்கு அம்சங்கள் இடம் பெறும் என்று அறிவிக்கப்பட்டது.

 

அதன்படி, திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 2வது மண்டலம் எம் எஸ் நகர் பகுதியில் மகிழ்ச்சியான ஞாயிறு நிகழ்வு, முதல்முறையாக நடைபெற்றது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதையடுத்து மாநகரின் மற்ற பகுதிகளிலும் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

 

மகிழ்ச்சி ஆரவாரம்!

 

அவ்வகையில், மாதத்தின் கடைசி ஞாயிற்றுக் கிழமையான இன்று (27/8/2023) திருப்பூர் மாநகராட்சி சார்பில் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வழக்கம் போல், இளைஞர்களின் பெருஞ்சலங்கை ஆட்டம், சிலம்பாட்டம், உள்ளிட்டவை பொதுமக்களின் ஆரவாரத்துக்கு மத்தியில் நடைபெற்றன.

மேலும், இளைஞர்களுக்கான டி.ஜே நடனத்தில் ஆண்களும் பெண்களும் உற்சாகமுடன் பங்கேற்று நடமனாடி மகிழ்ந்தனர். அத்துடன் சிறுவர் சிறுமியர்களுக்கான பல்வேறு விளையாட்டுப் போட்டிகளும் விமரிசையாக நடைபெற்றது. இதில் குட்டீஸ் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

 

தண்ணீர் இல்லை… `தண்ணி’ உண்டு

 

இதில் பங்கேற்ற பலரையும் சந்தித்து `குற்றம் குற்றமே’ நிருபர் குழு, அவர்களின் கருத்தை கேட்டறிந்தது. நம்மிடம் பேசியவர்கள் கூறியதாவது:

 

திருப்பூர் மாநகராட்சியின் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி உண்மையில் நல்லதொரு ஏற்பாடுதான். வாரம் முழுவதும் ஓடியாடி வேலை செய்த களைப்புக்கு, இந்த நிகழ்ச்சியின் மூலம் ஒரு புத்துணர்வு கிடைக்கிறது. நாங்கள் எல்லாம் வீட்டில் குழந்தைகளையும் அழைத்து வந்து இதில் பங்கேற்றிருக்கிறோம். வீடியோ கேம் என்று வீட்டில் அடைந்து கிடக்கும் குழந்தைகள், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று உற்சாகத்துடன் ஆடிப்பாடுவதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது.

 

அதேநேரம், இந்த நிகழ்ச்சியில் விளையாடி களைப்புடன் இருப்பவர்களுக்கு போதிய தண்ணீர் வசதியில்லை. சுற்றிலும் உள்ள கடைகளும் மூடப்பட்டுள்ளதால், தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படுகிறோம். மாநகராட்சி நிர்வாகம் போதிய குடிநீர் வசதியை ஏற்பாடு செய்து தர வேண்டும். அதேபோல், இதில் பங்கேற்கும் சிலர், மது அருந்திவிட்டு வருகின்றனர். இதனால், பெண்கள், டீன் ஏன் குழந்தைகளின் பாதுகாப்புக்கு ஆபத்து வருமோ என்ற கவலை உள்ளது. மது அருந்திவிட்டு வருவோர் சில்மிஷங்களில் ஈடுபட வாய்ப்புள்ளது. எனவே, மாநகராட்சி நிர்வாகமும், போலீசார் கண்காணித்து இதற்கு ஒரு தீர்வினை ஏற்படுத்தினால், நாங்கள் அச்சமின்றி, தயக்கமின்றி பங்கேற்று மகிழ்ச்சியாக இருக்க முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

 

மாநகராட்சி நிர்வாகம் கவனிக்குமா?

 

ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நடந்த பகுதிகளை நமது நிருபர்கள் குழு வலம் வந்தது பார்வையிட்டது. அப்போது ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி மேடையின் பின்புறம் சிலர் மதுபானம் அருந்திக் கொண்டிருந்ததை பார்க்க முடிந்தது. அதேபோல் யூனியன் மில் ரோடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகள் சிலவற்றில், விதிகளுக்கு புறம்பாக ரகசியமாக மதுபானங்களில் விற்பனை ஜோராக நடைபெற்றது.

 

நம்மிடம் பேசியவர்கள் தெரிவித்தது போல், ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியில் குடிநீர் வசதியின்றி அவதிப்படுவதை காண முடிந்தது. அதேபோல், மதுப்பிரியர்களும் இதில் கலந்து கொண்டதை பார்க்க முடிந்தது. எனவே, ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், இதனை ஆரம்பத்திலேயே கிள்ளி எறிய வேண்டும். இல்லாவிட்டால், சமூக விரோதிகள் ஊடுருவி வரும் நாட்களில் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி, அதன் உண்மையான நோக்கத்தை இழந்துவிடும் வாய்ப்புள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon