ரூ.200 கோடி லஞ்சம்.. சிபிஐ விசாரித்தால் ஸ்டாலின் சிறைக்கு செல்வது உறுதி..!
சென்னை மெட்ரோ ரயில் வழக்கை சிபிஐ கையில் எடுத்தால் முதல்வர் ஸ்டாலின் சிறைக்கு செல்வது உறுதி என்று அண்ணாமலை பகீர் கிளப்பியுள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை கைது செய்துள்ளனர்.
மேலும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வரும் 28 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டுள்ளது. இதனிடையே நெஞ்சு வலியால் பாதிக்கப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அவருக்கு இதயத்தில் 3 இடங்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்ட நிலையில் பைபாஸ் அறுவை சிகிச்சைக்காக உயர்நீதிமன்ற அனுமதியுடன் காவேரி மருத்துவமனைக்கு நேற்று மாற்றப்பட்டார். இதனிடையே செந்தில் பாலாஜி கைது குறித்து வீடியோ வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின், அமலாக்கத்துறையை வைத்து பாஜக மிரட்டிப்பார்ப்பதாக குற்றம்சாட்டினார்.
மேலும் அதிமுகவைபோல் தங்களை சீண்டி பார்க்க வேண்டாம் என்றும் முதல்வர் ஸ்டாலின் பாஜகவை எச்சரித்திருந்தார். இதனிடையே தமிழ்நாட்டில் சிபிஐ விசாரணை நடத்த வழங்கப்பட்டிருந்த முன் அனுமதியை தமிழ்நாடு அரசு ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தது. சில வகை வழக்குகளுக்கென வழங்கப்பட்டிருந்த பொதுவான முன் அனுமதியை தமிழ்நாடு அரசு திரும்பப்பெற்றது.
இதன் மூலம் இனி தமிழ்நாட்டில் சிபிஐ விசாரணை மேற்கொள்ள தமிழ்நாடு அரசிடம் முன் அனுமதி பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. முன் அனுமதி பெற்ற பிறகுதான் தமிழ்நாட்டில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்த முடியும். இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, சிபிஐயை கண்டு முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுவதாக தெரிவித்துள்ளார்.
சென்னை மெட்ரோ ரயில் திட்ட பணிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் லஞ்சம் பெற்றது தொடர்பாக சிபிஐயிடம் தாங்கள் புகார் அளித்துள்ளதால் முன் அனுமதியை முதல்வர் ஸ்டாலின் ரத்து செய்துள்ளதாக கூறியுள்ளார் அண்ணாமலை.
மேலும்சென்னை மெட்ரோ ரயில் பணிகளுக்காக முதல்வர் 200 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றுள்ளார் என்றும், மெட்ரோ வழக்கை சிபிஐ கையில் எடுத்தால் முதல்வர் ஸ்டாலின் சிறைக்கு செல்வது உறுதி என்றும் அண்ணாமலை கூறியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




