திருமுருகன்பூண்டி ரிங் ரோட்டில் பரபரப்பு :அதிவேகமாக வந்த கார் மட்டன் கடைக்குள் புகுந்து 5 இருசக்கர வாகனங்கள் கடும் சேதம்..!
திருப்பூர், எம்.எஸ் நகர் பகுதியில் வசித்து வருபவர் சசிதரன். இவர் புது கட்டிடங்களுக்கு இன்டீரியர் டெக்கரேஷன் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சுதாமணி. இவர்களது மகன் அபிஷேக் (வயது 30). இவர் பனியன் ஏற்றுமதி நிறுவனத்தில் அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ரேஷ்மா (26). இவர்களது மகன் அத்விக் (2).
இவர்கள் ஐந்து பேரும் நேற்று காலை 8:30 மணி அளவில் எம் எஸ் நகரில் இருந்து கேரள மாநிலம் பாலக்காடு பகுதியில் வசித்து வரும் உறவினரின் வளைகாப்புக்கு தங்களது காரில் பூண்டி ரிங் ரோட்டில் வந்து கொண்டிருந்தனர். காரை அபிஷேக் ஓட்டி வந்தார்.
அப்போது வழியில் உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் அடித்துவிட்டு கேது கோயில் அருகே உள்ள வளைவு பாதியில் அதிவேகமாக வந்து கொண்டிருந்தனர். அப்போது வளைவு ரோட்டில் இருந்த வேகத்தடையில் வேகமாக ஏறியது. இதனால் கார் கட்டுப்பாட்டை இழந்தது.

பின்னர் எதிரே வந்து கொண்டிருந்த லாரியின் மீது மோதாமல் இருக்க காரை மேலும் இடதுபுறம் வளைக்க சாலையோரத்தில் இருந்த கனி என்பவருக்கு சொந்தமான கோழிக் கடை மீது மோதியது. அப்போது மட்டன் சிக்கன் வாங்க வந்தவர்கள் கடை முன்பு தங்களது 2 சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு நின்று கொண்டிருந்தனர்.
கறிக்கடை உரிமையாளர் கனியும் கடை முன்பு நின்று கொண்டிருந்தார். அப்பொழுது இவர் கடையை நோக்கி கார் தாறுமாறாக வருவதை பார்த்த அவர் சுதாரித்துக் கொண்டு சிக்கன் வாங்க வந்து நின்று கொண்டிருந்த செழியன் என்பவர் வேகமாக தன் கடைக்குள் இழுத்துக் கொண்டார். இதனால் அவர் உயிர் தப்பினார்.
இந்த நிலையில் வேகமாக வந்த கார் அங்கு நின்று கொண்டிருந்த 5 இருசக்கர வாகனங்கள் மீது மோதியதுடன் கடைக்கு கொடுக்கப்பட்ட மின் இணைப்பு சுவற்றில் மோதியது. இதில் மின் இணைப்பு போடப்பட்ட மீட்டருடன் இணைக்கப்பட்ட சுவர் துண்டாக தனியாக விழுந்தது. உடனே இதுகுறித்து மின்வாரியத்துக்கு தகவல் கொடுக்க அவர்கள் வந்து மின் இணைப்பை துண்டித்தனர்.
மேலும் அருகில் கோழிகள் வைத்து இருந்த கோழி கூண்டும் சேதம் அடைந்தது. இதுகுறித்து திருமுருகன்பூண்டி போலீசாருக்கு போலீசார் தகவல் கொடுக்க போலீசார் வந்து விசாரணை நடத்தினர். அப்பொழுது போலீசாரிடம் கார் ஓட்டிவந்த அபிஷேக் கார் பிரேக் பிடிக்கவில்லை என்று மழுப்பலாக பதில் கூறினார்.
ஆனால் பொதுமக்கள் அவருடன் கடும் வாக்குவாதம் செய்தனர். பின்னர் போலீஸார் செழியன், சம்பத், மாணிக்கம் ஆகிய 3 பேரின் வாகனங்களையும் கோழிக்கடை உரிமையாளர் கனிக்கு சொந்தமான 2 வாகனங்கள் என அனைத்து சேதமடைந்த வாகனங்களையும் ஒரு வாகனத்தில் ஏற்றி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
இதனையடுத்து பாண்டீஸ்வரன் என்ற போலீஸ்கார் காரை பின்னால் எடுக்க முயல கார் ஸ்டார்ட் ஆகவில்லை. பின்னர் பொதுமக்கள் உதவியுடன் காரை பின்னால் தள்ள வைத்து வெளியே கொண்டு வந்தார். அப்பொழுது அவர் பிரேக் அடிக்க வண்டி நின்றது.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அபிஷேக்கிடம் பிரேக் பிடிக்கவில்லை என்று ஏன் பொய் சொல்கிறாய் என்று அபிஷேக்கிடமும் அவன் குடும்பத்தினருடன் வாக்குவாதம் செய்தனர். அவர்களை போலீசார் சமாதானப்படுத்தி காரையும் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
நல்ல வேலையாக அருகில் இருந்த மின்கம்பத்தின் மீது மோதி இருந்தாலோ அல்லது கடைக்குள் புகுந்து இருந்தாலோ கடும் உயிர் சேதம் ஏற்பட்டிருக்கும். இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கார் மோதியதில் 4 வாகனங்கள் கடும் சேதம் அடைந்ததால் காரின் உரிமையாளர் மெக்கானிக்கை வரவழைத்து இதை சரி செய்து தருவதாக உறுதி அளித்தார். பின்னர்இதுகுறித்து திருமுருகன்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




