திமுக தலைமையிலான தமிழக அரசு பொறுப்பேற்றதும் தேர்தல் வாக்குறுதியில் அளித்த உறுதிமொழியின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் மகளிர் குழுக்கள் பெற்ற கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் பல்வேறு வங்கிகளில் மகளிர் குழுக்கள் பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.
அதற்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி அழகாபுரம் பகுதியில் உள்ள கூட்டுறவு கல்யாண மண்டபத்தின் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜேந்திரன் அருள் சதாசிவம், மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே. என். நேரு, சுகாதாரத்துறை அமைச்சர் எம் சுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொண்டு மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ்களை வழங்கினர்.
இந்த விழாவில் மொத்தம் 5 ஆயிரத்து 241 மகளிர் சுய உதவி குழுவிற்கு 134 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ்களை தனித்தனியே வழங்கினர். இந்த விழாவில் கூட்டுறவு சங்க மண்டல இணைப்பதிவாளர் ரவிக்குமார் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.