செவிலியர் கல்லூரி விடுதி மாணவிகளுக்கு உடல் நலக்குறைவு..!
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக செவிலியர் கல்லூரி விடுதி மாணவிகள் 15 பேருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உள்ள செவிலியர் கல்லூரி விடுதியில் வழக்கம் போல் நேற்றிரவு மாணவிகள் இரவு உணவு சாப்பிட்டு தூங்கிவிட்டனர்.
இன்று காலை சுமார் 15 மாணவிகளுக்கு திடீரென வாந்தி, மயக்கம் வந்தது. இதையடுத்து பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
உணவு சரியில்லாததால் மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் வந்ததாகவும் விடுதியைச் சுற்றி தண்ணீர் தேங்கி சுகாதாரமற்ற நிலையில் உள்ளதால் விஷ ஜந்துக்கள் வருவதாகவும் மாணவிகள் தெரிவித்தனர்.
பல்கலைக்கழக துணை வேந்தரை சந்தித்து விடுதி மற்றும் உணவின் தரம் குறித்து புகார் அளிக்க வந்த மாணவிகளை கல்லூரி முதல்வர் சமாதானப்படுத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி அனுப்பி வைத்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




