கருக்கலைப்பு செய்த பெண் உயிரிழந்த விவகாரம்..!
கருவில் இருந்த பெண் சிசுவை அழிக்க முடிவெடுத்து தாய் தனது உயிரை விட்ட சம்பவம் ஒன்று கள்ளக்குறிச்சியில் அரங்கேறி உள்ளது. கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த கீழக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜ் – அமுதா தம்பதிக்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன.
மூன்றாவது முறையாக அமுதா கருவுற்றிருந்தார். இந்த முறையும் பெண் குழந்தை பிறந்து விடுமோ என்ற அச்சம் கோவிந்தராஜ் – அமுதா தம்பதிக்கு எழுந்துள்ளது. சட்டப்படி கருவில் உள்ள குழந்தை ஆணா பெண்ணா என அறிய முடியாது.
ஆனால் பணத்திற்காக அதை செய்யவும் சில இடங்கள் இருக்கத்தான் செய்கின்றன. அப்படி ஒரு இடத்தை தான் கோவிந்தராஜ் அமுதாவும் அணுகியுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு மருந்தகம் தான் அது. வெளி பார்வைக்கு மருந்தகம் என்றாலும் அதற்குள் ஸ்கேன் எந்திரங்கள் எல்லாம் உண்டு.
அதில் ஸ்கேன் செய்து பார்த்ததில் அமுதாவின் கருவில் இருப்பது பெண் குழந்தை என்பது தெரியவந்துள்ளது. தம்பதி மருந்தகத்தில் சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்ய இசைத்திருக்கின்றனர். கருக்கலைப்புக்கு பின் இரண்டு நாட்களுக்கு பின் அமுதா வீட்டில் இருந்த நிலையில் திடீரென அவருக்கு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அமுதாவை அவசர அவசரமாக வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் அவர் அங்கு இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவிக்கவே உறவினர்கள் உறைந்து போய் உள்ளனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





