கிரிவலம் செல்ல 20,000 பக்தர்களுக்கு அனுமதி..!
கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் இன்று அதிகாலை 4 மணி அளவில் நடை திறக்கப்பட்டு பரணி தீபம் ஏற்றப்பட்டது. அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீப திருவிழா கடந்த 10ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கடந்த ஆண்டை போலவே தடுப்பு நடவடிக்கையாக கோவில் உற்சவ நிகழ்ச்சிகளை ரத்து செய்யப்பட்டுள்ளது. தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று மாலை 6 மணியளவில் 2,668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.
இதனையொட்டி இன்று அதிகாலை 4 மணிக்கு சாமி சன்னதியில் உள்ள அர்த்த மண்டபத்தில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. திருவண்ணாமலை கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா பாதுகாப்பு விதிமுறைகளுடன் அனைத்து பக்தர்களையும் அனுமதிக்கக் கோரி வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது இந்து சமய அறநிலையத்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் கிரிவலம் செல்ல திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 5 ஆயிரம் பேர், வெளி மாவட்டங்களை சேர்ந்த பதினைந்தாயிரம் பேர் என 20 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் மலையேரவோ கோவிலுக்குள் செல்லவோ பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என்றும் கட்டளைதாரர்கள் மட்டுமே கோயிலுக்குள் செல்ல அனுமதி அளித்ததாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.






