ஆவினில் மேலாளர் வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றியதாக புகார்..!
வேலை வாங்கி தருவதாக கூறி மூன்று கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது இரண்டு புகார்களை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். முன் ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ராஜேந்திரபாலாஜி மனு தாக்கல் செய்துள்ளார்.
ஆவினில் மேலாளர் வேலை வாங்கித் தருவதாக கூறி பல லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளதாக ரவீந்திரன் என்பவர் அதிமுக ஒன்றிய செயலாளர் நல்லதம்பி மீது மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையிடம் புகார் அளித்திருந்தார்.
இதனை தொடர்ந்து நடத்திய விசாரணையில் இந்த மோசடியில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அதிமுக ஒன்றிய செயலாளர் விஜய நல்லதம்பி, அதிமுக உறுப்பினர் மாரியப்பன் ஆகிய மூன்று பேருக்கு தொடர்பு இருப்பதாக தெரியவந்தது.
இதையடுத்து 3 பேர் மீது மோசடி உள்ளிட்ட இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனிடையே அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பலருக்கும் வேலை வாங்கி தருவதாக கூறி தன்னிடம் 3 கோடி ரூபாய் வாங்கி ஏமாற்றி விட்டதாக அதிமுக ஒன்றிய செயலாளர் விஜயன் நல்லதம்பி என்பவர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
அதன்பேரில் ராஜேந்திரபாலாஜி அவரது உதவியாளர்கள் முத்துப்பாண்டி, பாபுராஜ், பலராமன் உள்ளிட்டட 4 பேர் மீது 406, 420, 506 ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் முன்ஜாமீன் கோரி ராஜேந்திரபாலாஜி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.
அதில் தனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்று புகார் அளித்தவர் மீது எட்டுக்கும் மேற்பட்ட குற்றவியல் வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.






