நகைச்சுவை என்ற பெயரில் போராளிகளை இழிவுப்படுத்துவதா..? சந்தானத்திற்கு கடும் கண்டனம்
நகைச்சுவை என்ற பெயரில் போராளிகளை இழிவுபடுத்தும் மனிதநேயமற்ற திரைப்பட விளம்பரத்தை நடிகர் சந்தானம் திரும்பப் பெற வேண்டும் என்று தந்தை பெரியார் திராவிட கழக பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் நடிகர் சந்தானம் நடித்த திரையரங்கிற்கு வர உள்ள சபாபதி என்ற திரைப்படத்தின் விளம்பர போஸ்டரில் தண்ணீர் திறந்துவிட ஆர்ப்பாட்டம் அனைவரும் திரண்டு வருக என்ற வாசகம் இடம் பெற்றிருப்பதாகவும் அந்த வாசகத்தின் மீது சந்தானம் சிறுநீர் கழிப்பது போல காட்சி இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
உடனடியாக அந்த திரைப்படத்தில் இந்த காட்சியை நீக்குவது மட்டுமின்றி படங்களை திரும்பப் பெற வேண்டும் என்றும் இல்லாவிட்டால் தண்ணீருக்காக போராடுகின்ற மக்களோடு அந்த திரைப்படம் திரையிடப்படும் திரையரங்குகளில் முன்னால் போராட்டம் நடத்துவோம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.






