சிபிஎஸ் 10,12 ஆம் வகுப்புக்கு புதிய தேர்வு நடைமுறை அறிமுகம்..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கல்வியாண்டு 2 பருவங்களாக பிரிக்கப்பட்டு இரண்டு பருவங்களாக இறுதித் தேர்வு நடத்தப்படும் என சிபிஎஸ்இ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

 

கொரொனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு மற்றும் இந்த ஆண்டுக்கான 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. கடந்த சில மாதங்களுக்குள் இந்த ஆண்டு அனைத்து பாடங்களுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

 

2021- 2022 ஆம் கல்வியாண்டில் புதிய முறையில் தேர்வுகள் நடத்த சிபிஎஸ்சி எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியம் திட்டமிட்டுள்ளது.

 

இதுகுறித்து சிபிஎஸ்இ வெளியிட்டுள்ள அறிக்கையில் சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கல்வி ஆண்டு இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்படும் என்றும் இரண்டு பருவங்களில் இறுதியிலும் பருவ தேர்வு நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

முதல் பருவத் தேர்வு நவம்பர், டிசம்பர் மாதங்களில் இரண்டாம் பருவ தேர்வு மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறும் என கூறப்படுகிறது. ஒவ்வொரு பருவத்திற்கும் மொத்த பாடத் திட்டத்தில் 50 சதவீத பாடத்திட்டம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

முதல் பருவத்தேர்வு 90 நிமிடங்கள் நடைபெறும் மற்றும் இரண்டாம் பருவ தேர்வு 2 மணி நேரம் நடைபெறும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு பருவத்தின் முடிவில் மாணவர்களின் திறமையை மதிப்பிடும் வகையில் பள்ளி அளவிலான அகமதிப்பீட்டுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

பள்ளிகள் திறப்பு குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும் என்றும் அதுவரை தொடர்ந்து ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெறும் எனவும் சிபிஎஸ்சி உத்தரவிட்டுள்ளது.


Leave a Reply