விண்ணுக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் திட்டம்..!
விண்ணுக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் திட்டத்தின் முதல் கட்டமாக ஆளில்லா விண்கலத்தை வரும் டிசம்பர் மாதத்திற்குள் செலுத்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய முனைப்பு காட்டி வருகிறது. கொரொனா முதல் இரண்டு அலை இந்த திட்டத்தை வெகுவாக பாதித்து உள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தை இஸ்ரோ கையில் எடுத்துள்ளது. இதை வெற்றிகரமாக நிறை வேற்றினால் விண்வெளிக்கு மனிதனை அனுப்பிய நான்காவது நாடாக இந்தியா இருக்கும்.
மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புவதற்கு முன்பாக அனைத்தும் சரியாக செயல்படுகிறதா என்பதை உறுதி செய்துகொள்ள இரண்டு ஆளில்லா விண்கலங்களை இந்தியா செலுத்தவேண்டும். முதலாவது விண்கலத்தை டிசம்பருக்குள் செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆனால் கொரொனா பாதிப்பால் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டு உள்ளதால் திட்டத்திற்கு தேவையான பல உபகரணங்கள் உரிய நேரத்தில் கிடைக்காதது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
எனினும் திட்டத்திற்கான பெரும்பாலான பணிகள் நிறைவடைந்து இருப்பதால் உரிய நேரத்தில் விண்கலத்தை ஏவ முடியும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.






