பாலியல் குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டார் தருண் தேஜ்பால்..!
பாலியல் குற்றச்சாட்டில் இருந்து தெகல்கா முன்னாள் ஆசிரியர் தருண் தேஜ்பால் விடுவிக்கப்பட்டுள்ளார். தெகல்கா இதழின் நிறுவனரும் முன்னாள் ஆசிரியருமான தருண் தேஜ்பால் மீது அவரது நிறுவனத்தில் பணியாற்றிய பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.
கோவாவில் கடந்த 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற கூட்டத்தின்போது லிப்டில் வைத்து தன்னிடம் தருண் தேஜ்பால் பாலியல் ரீதியாக அத்து மீறியதாக அந்தப்பெண் தெரிவித்திருந்தார். இந்த குற்றச்சாட்டுகளை தருண் தேஜ்பால் மறுத்திருந்த நிலையில் 2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கைது செய்யப்பட்டார்.
அவர் தற்போது பிணையில் உள்ள நிலையில் தேஜ்பால் மீதான பாலியல் புகார் உள்ளிட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள தேஜ்பால் நீதிமன்றத்திற்கு நன்றி தெரிவித்துள்ளார்.
பொய்யான புகார் காரணமாக 7 ஆண்டுகளாக பொது வாழ்விலும் சொந்த வாழ்விலும் பல்வேறு இன்னல்களை சந்தித்துள்ளதாக தேஜ்பால் தெரிவித்துள்ளார்.






