தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!
சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஜனநாயகத்தின் மிகப்பெரிய திருவிழாவான தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதையொட்டி பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் ஐந்தாம் தேதி வரை இயக்கப்படுகின்றன. சென்னையில் இருந்து ஐந்து நாட்களுக்கு 14 ஆயிரத்து 215 பேருந்துகளும், கோவை, திருப்பூர், சேலம், பெங்களூரு ஆகிய நகரங்களில் இருந்து 2,644 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
ஏப்ரல் 4 மற்றும் 5ஆம் தேதிகளில் மட்டும் பண்டிகை காலங்களைப் போன்று சென்னையில் ஐந்து இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மீண்டும் கொரொனா பரவல் அதிகரித்திருக்கும் நிலையில் பயணிகளுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனையும் முகக் கவசம் அணிவது கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு பேருந்துகளை 2 லட்சத்துக்கும் அதிகமானோர் பயன்படுத்துவர் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தமிழக சுகாதாரத் துறையும் பயணிகளுக்கான பாதுகாப்பு வசதிகளை மேற்கொள்கிறது.






