9,10,11ம் வகுப்புகளுக்கு தேர்வு உண்டா? இல்லையா? குழப்பம் ஏற்பத்திய அறிவிப்புகள்… முற்றுப்புள்ளி வைத்த அரசு!!
தமிழகத்தில், 9,10,11 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் ஆல்-பாஸ் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அவர்களுக்கு பள்ளி அளவில் தேர்வு நடத்தி மதிப்பெண்கள் வழங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டதாக தகவல் வெளியான நிலையில், மாலையில் தேர்வுகள் எதுவும் நடத்தப்படாது என்று அரசு விளக்கம் அளித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்ததால், கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரி, கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டன. பின்னர், ஆன்லைனில் மாணவர்களுக்கு பாடம் நடத்தப்பட்டு வந்தது. இதனிடையே, கடந்த ஜனவரி மாதம் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் தொடங்கப்பட்டன. அதன் பின்னர், 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டு வந்தன.
இதனிடையே, குறைந்த காலத்தில் பாடங்களை நடத்தி முடிப்பதில் சிக்கல் ஏற்பட்டதன் காரணமாக 9, 10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் அவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாக, அதாவது ஆல்- பாஸ் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதேநேரம், 10 ஆம் வகுப்பு மாணவர்களை எந்த அடிப்படையில் 11 ஆம் வகுப்பு அல்லது தொழிற்கல்வியில் சேர்ப்பது என்ற குழப்பம் நீடித்து வந்தது.
இந்நிலையில், அனைத்து பள்ளிகளிலும் 9,10,11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையில், இந்த மாத இறுதிக்குள் பள்ளி அளவில் பொதுத்தேர்வு நடத்தி முடிக்க வேண்டும், அதற்கான மதிப்பெண்களை பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளதாக, மாவட்ட கல்வி அதிகாரிகளை மேற்கோள்காட்டி சில ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டன.
அதேநேரம், ஆல்-பாஸ் என்ற அறிவிப்புக்கு பிறகு பள்ளிகளுக்கு மாணவர்களின் வருகை கணிசமாக குறைந்துவிட்டது. போதாக்குறைக்கு தற்போது கொரோனா தொற்றின் பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால், பள்ளிகளுக்கு குழந்தைகளை அனுப்ப பெற்றோர் மத்தியில் தயக்கம் ஏற்பட்டது.
ஆனால், இன்று மாலை அரசு தரப்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், 9, 10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எந்த தேர்வும் நடத்தப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




