--- --:--:-- --

கவர்ச்சி அறிவிப்புகள் இல்லை… பொருளாதாரம், மகளிருக்கு முக்கியத்துவம்…. திமுக தேர்தல் அறிக்கையில் திருத்தம் செய்தார் ஸ்டாலின்

Stalin 07

எதிர்பார்ப்புக்கு மாறாக திமுக தேர்தல் அறிக்கையில் பெரிய அளவில் இலவசங்கள், கவர்ச்சிகர அறிவிப்புகள் இல்லை; மாறாக பெண்கள் நலன், தொலைநோக்குடன் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளதாக, அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

 

தமிழக சட்டப்பேரவைத்தேர்தல் வருகிற 6ம் தேதி நடைபெறுகிறது. இத்தேர்தலில் திமுக173 தொகுதிகளில் போட்டியிருகிறது. நேற்று திமுகவின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் வெளியிட்டார். இதில் இடம் பெற்றுள்ள முக்கிய வாக்குறுதிகளாவன:

 

* திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வற்புறுத்துவோம்.

* கடும் ஊழல் புகாரில் சிக்கியுள்ள அதிமுக அமைச்சர்கள் மீதான புகாரை விசாரிக்க தனி நீதிமன்றம் ஏற்படுத்தப்படும்.

* முதல்வரின் நேரடிகட்டுபாட்டில் தனித்துறை உருவாக்கப்பட்டு உங்கள் தொகுதி ஸ்டாலின் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட புகார் மனுக்கள் மீது 100 நாட்களில் தீர்வு காணப்படும்.

* கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ள தொழில் மேம்பாடு அடையும் வரையில் சொத்து வரி அதிகரிக்கப்படாது .

* கொரோனா தொற்று காலத்தில் வாழ்வாதாரம் இழந்து தவித்த அரிசி அட்டைகுடும்ப அட்டைதாரர்கள் வைத்துள்ளவர்களுக்கு நிவாரண தொகையாகரூ.4 ஆயிரம் வழங்கப்படும்.

* ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்படும்.

* அனைத்து தரப்பு மக்களின் நலத்தை கருத்தில் கொண்டு பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5, டீசல் லிட்டருக்கு ரூ.4 வரை குறைக்கப்படும்.

* சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.100 மானியமாக வழங்கப்படும்.

* பெரிய மாநகராட்சிகளில் பறக்கும் சாலை திட்டம் செயல்படுத்தப்படும்.

* மாதம் ஒருமுறை மின்கட்டணம் கட்டும் நடைமுறை செயல்படுத்தப்படும்.

* நியாய விலை கடைகளில் மாதம் ஒரு கிலோ சர்க்கரை கூடுதலாக தரப்படும். உளுந்தம் பருப்பு மீண்டும் வழங்கப்படும்.

* அரசு வேலை வாய்ப்புகளில் பெண்கள் இட ஒதுக்கீடு 30 விழுக்காட்டில் இருந்த 40 விழுக்காடாக உயர்த்தப்படும்.

* சட்டம் ஒழுங்கை காக்கும் பணியின் போது உயிரிழந்த காவலரின் குடும்பங்களுக்குரூ.1 கோடி வழங்கப்படும்.

* பெண்களுக்கு எதிராக சைபர் குற்றங்களை களைய சைபர் காவல் நிலையங்கள் உருவாக்கப்படும்.

* மலைக்கோயில்கள் அனைத்திலும் கேபிள் கார் வசதி ஏற்படுத்தி தரப்படும்.

* கிராமப்புற பூசாரிகளின் ஊதியம் மற்றும் ஓய்வூதியம் அதிகரிக்கப்படும்.

* இந்து ஆலயங்கள் புனரமைப்பு மற்றும் குடமுழுக்கு நடத்த ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்து தரப்படும்.

* மசூதி, தேவாலயங்களை சீரமைக்க ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

* அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றுள்ள 205 அர்ச்சகர்களுக்கு உடனடி பணி நியமனம் செய்யப்படும்.

* 32 லட்சம் ஆதரவற்ற பெண்கள், 50 வயதை கடந்த மணமாகாத பெண்கள், மாற்றுத்திறனாளி கள் ஓய்வூதியம் ரூ.1,500 ஆக உயர்த்தப்படும்.

* ஏழை மக்கள் பசி தீர 500 இடங்களில் கலைஞர் உணவகம் அமைக்கப்படும்.

* பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஊடகத்துறை நலன்காக்க ஆணையம் அமைக்கப்படும்.

* பத்திரிக்கையாளர்கள் ஓய்வூதியம் உயர்த்தப்படும்.

* சிறுகுறு விவசாயியகள் புதிய மின்மோட்டார் வழங்க ரூ.10 ஆயிரம் வரை மானியம் வழங்கப்படும்.

* ஆட்டோ ஓட்டுநர்கள் சொந்தமாகஆட்டோ வாங்க ரூ.10 ஆயிரம் மானியம் தரப்படும்.

* மகளிருக்காக பேறுகாலஉதவி தொகை ரூ.24 ஆயிரமாக உயர்த்தப்படும்.

* நீட் தேர்வை ரத்து செய்ய கழக ஆட்சி அமைந்தவுடனேயே சட்டப்பேரவையை கூட்டி சட்டம் இயற்றப்படும்

* வேலையில்லா பட்டதாரிகள் தொழில் தொடங்க ரூ.20லட்சம் வரை கடன் வசதி செய்து தரப்படும்.

* அரசு பெண் ஊழியர்களுக்குபேறு கால விடுமுறை 12 மாதங்களாக உயர்த்தப்படும்.

* சிறப்பு தாய் சேய் நல திட்டத்தால் கருவுற்ற பெண்ககளுக்கு வீடு தேடி மருத்துவ வசதி வரும்.

* அரசு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு டே்டாவுடன் டேப் வழங்கப்படும்.

* கல்வி நிறுவனங்களில் வைபை வசதி செய்து தரப்படும்.

* நெல்குவிண்டாலுக்கு ரூ.2,500 ஆக உயர்த்தி வழங்கப்படும்.

* கரும்புக்கு ஆதார விலை டன் ஒன்று ரூ.4ஆயிரம் உயர்த்தி வழங்கப்படும்.

* ஏழை எளிய சிறு வணிகர்களுக்கு ரூ.15 ஆயிரம் வட்டியில்லா கடன் வழங்கப்படும்.

* மத்திய அரசு பள்ளிகள்உட்பட தமிழக பள்ளிகள் அனைத்திலும் 8ம் வகுப்பு வரை தமிழ் கட்டாய பாடம் ஆக்கப்படும்.

 

மேலே கூறப்பட்டவை உள்பட 500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை திமுக அளித்துள்ளது.

 

வழக்கமாக டிவி இலவசம், கிரைண்டர் இலவசம் என்றெல்லாம் அதிரடியாக இலவசங்களை, கடந்த தேர்தல் அறிக்கைகளில் அளித்து வந்த திமுக, இம்முறை அதிரடி இலவசங்களை அறிவிக்காமல் ஆக்கபூர்வமாக திட்டங்களை அறிவித்திருப்பதாக, அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

 

அதேநேரம், பெண்கள் நலனை கருத்தில் கொண்டு பேறுகால விடுப்பு அதிகரிப்பு, மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி, டவுன் பஸ்களில் இலவச பயணம், * 32 லட்சம் ஆதரவற்ற பெண்கள், 50 வயதை கடந்த மணமாகாத பெண்கள், மாற்றுத்திறனாளி கள் ஓய்வூதியம் ரூ.1,500 ஆக உயர்த்தப்படும் என்பது போன்ற மகளிர் நலன் கருதிய திட்டங்கள் திமுக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.

 

இந்துக்களுக்கு எதிரான கட்சி என்ற மாயையை போக்கும் வகையில் இந்து ஆலயங்கள் புரனமைப்புக்கு ரூ.1000 கோடி, மலைக்கோயில்கள் அனைத்திலும் கேபிள் கார் வசதி ஏற்படுத்தி தரப்படும், கிராமப்புற பூசாரிகளின் ஊதியம் மற்றும் ஓய்வூதியம் அதிகரிப்பு போன்ற அறிவிப்புகளும் உள்ளன.

 

தேர்தல் அறிக்கையில் திருத்தங்களை அறிவித்த ஸ்டாலின் 

 

அதே நேரம், திமுக தேர்தல் அறிக்கையில் குடியுரிமைச் சட்டம் குறித்த எந்த தகவலும் இல்லை என்பதால் இஸ்லாமியர்கள் மத்தியில் அதிருப்தி எழுந்தது. இந்நிலையில் தேர்தல் அறிக்கையில் குடியுரிமைச் சட்டத்தை நீக்கக்கோரும் அம்சங்களை இணைத்துள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கையில், திமுக தேர்தல் அறிக்கையில் உள்ள – வாக்குறுதி 43-ல், “விவசாயிகளுக்கு எதிரான சென்னை – சேலம் எட்டு வழிச்சாலைத் திட்டம் நிறைவேற்றப்படாது” என்பதையும், வாக்குறுதி 367-ல், “சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிவிக்கை 2020 நிராகரிக்கப்படும். காட்டுப்பள்ளித் துறைமுகம் அமைக்க அனுமதிக்கப்பட மாட்டாது” என்பதையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

 

மேலும் வாக்குறுதி 500-இல் நேர்ந்துள்ள எழுத்துப் பிழையைப் பின்வருமாறு சரி செய்து, படித்திடவும் கேட்டுக் கொள்கிறேன்: “இந்தியக் குடியுரிமைத் திருத்தச் சட்டம் 2019-ஐ திரும்பப் பெற மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும். * இலங்கையில் இருந்து வந்து, இந்தியாவில் உள்ள முகாம்களில் தங்கி இருக்கும் நாடற்ற இலங்கைத் தமிழர்களுக்கு, இந்தியக் குடியுரிமை வழங்கிட மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தப்படும்” என்று திருத்தி வாசிக்க ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

 

மொத்தத்தில் கவர்ச்சிகர அறிவிப்புகளுக்கு விடைகொடுத்து, பொருளாதாரம், மகளிர் நலன் உள்ளிட்ட வளர்ச்சி சார்ந்த திட்டங்களுக்கு திமுக முக்கியத்துவம் தந்திருப்பது, பாராட்டுக்குரியது என்பதே அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon