--- --:--:-- --

அதிமுக வேட்பாளர் திடீர் வாபஸ்! மார்க்சிஸ்ட் கட்சிக்கான தொகுதிகள் அறிவிப்பு…

admk office (2)

அதிமுக வேட்பாளர்கள் பட்டியலில், பெரம்பலூர், தஞ்சாவூர் தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது; லால்குடி அதிமுக வேட்பாளர் வாபஸ் பெறப்பட்டுள்ளார். இதனிடையே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்படுள்ள தொகுதிகள் விவரம் வெளியாகி இருக்கிறது.

 

அ.தி.மு.க. தனது 2ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலில், பெரம்பலூர் (தனி), தஞ்சை, பத்மநாபபுரம் ஆகிய 3 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்காமல் இருந்து வந்தது. தற்போது இதில் இரு தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

அதன்படி, பெரம்பலூர் (தனி) தொகுதிக்கு பெரம்பலூர் மாவட்ட மாணவரணி செயலாளர் இளம்பை ஆர்.தமிழ்செல்வன், தஞ்சாவூர் தொகுதிக்கு கரந்தை பகுதி செயலாளர் வி.அறிவுடைநம்பி ஆகியோர் வேட்பாளர்களாக அ.தி.மு.க. தலைமை அறிவித்துள்ளது.

 

மேலும், லால்குடி சட்டசபைத் தொகுதி ஜி.கே. வாசனின் த.மா.கா.வுக்கு வழங்கப்பட்டுள்ளதால், அந்த தொகுதிக்காக அறிவிக்கப்பட்டிருந்த அதிமுக வேட்பாளர் வாபஸ் பெறப்படுகிறார் என்றும் அ.தி.மு.க. அறிவித்துள்ளது. அங்கு ஏற்கனவே அ.தி.மு.க. வேட்பாளராக ராஜாராம் அறிவிக்கப்பட்டிருந்தார்.

 

அதிமுக தரப்பில், பத்மநாபபுரம் தொகுதிக்கு மட்டும் இன்னும் யாருக்கும் ஒதுக்கப்படவில்லை. தற்போதுள்ள நிலவரப்படி, அ.தி.மு.க. 178 தொகுதிகளிலும், பா.ம.க. 23 தொகுதிகளும், பா.ஜ.க. 20 தொகுதிகளிலும், த.மா.கா. 6 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. பெருந்தலைவர் மக்கள் கட்சி, புரட்சி பாரதம், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், மூவேந்தர் முன்னேற்ற கழகம், பசும்பொன் தேசிய கழகம், அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம் ஆகிய கட்சிகளுக்கு தலா 1 தொகுதி என, மொத்தம் 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

 

இதனிடையே, திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 6 தொகுதிகள் விவரம் வெளியாகி இருக்கிறது. அதன்படி, திருப்பரங்குன்றம், கந்தர்வக்கோட்டை (தனி), திண்டுக்கல், கோவில்பட்டி, அரூர் (தனி), கீழ்வேளூர் (தனி) ஆகிய தொகுதிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon