--- --:--:-- --

மம்தா மீது தாக்கு… ஜனநாயகம் மீதான தாக்குதல்! ஸ்டாலின் ஆவேசம்!!

Stalin 01 (2)

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தாக்கப்பட்டதற்கு, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

 

தமிழகம் போலவே மேற்கு வங்கத்திலும் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கிறது. மார்ச் 27, ஏப்ரல் 1, 6, 10, 17, 22, 26 மற்றும் 29 ஆகிய தேதிகளில் எட்டு கட்டங்களாக அங்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

 

மேற்கு வங்கத்தில், ஆளும் திரிணமூல் காங்கிரஸ், பாஜக – இடதுசாரி கட்சிகள் இடையே போட்டி நிலவுகிறது. இத்தேர்தலில் முதல்வர் மம்தா பானர்ஜி, நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்கான வேட்புமனுவை அவர் நேற்று தாக்கல் செய்தார்.

 

முன்னதாக, வேட்புமனு தாக்கலுக்கு முன்பாக, நந்திகிராமில் உள்ள சிவன் கோவிலில் அவர் வழிபாடு செய்தார். அப்போது, மம்தா பானர்ஜியின் காரை வழிமறித்து மர்ம நபர்கள் கொலை முயற்சித் தாக்குதல் நடத்தியதாக, திடுக்கிடும் தகவலை மம்தா பானர்ஜி நேற்று தெரிவித்திருந்தார். தனது காரில் ஏற முயன்றபோது நான்கு அல்லது ஐந்து பேர் தன்னை தாக்கி, தள்ளியதாக கூறியிருந்தார்.

 

அத்துடன், காலில் வீக்கம் சென்று சொல்லி கொல்கத்தா மருத்துவமனையின் தீவிர கண்காணிப்பில் மம்தா சிகிச்சைக்கு சேர்ந்து கொண்டார். அங்கு அவர் சிகிச்சை பெறும் படங்கள் இன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தன. ஆனால், இதெல்லாம் திட்டமிட்ட ஒரு நாடகம் என்று பாஜக தரப்பில் மறுக்கின்றனர்.

 

இந்த சூழலில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தாக்கப்பட்டதற்கு, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் ஸ்டாலின் கூறியிருப்பதாவது: முதல்வர் மமதா பானர்ஜி அவர்கள் மீதான வெட்கக்கேடான தாக்குதல் இந்திய ஜனநாயகத்தின் மீதான தாக்குதலாகும்.

 

இத்தகைய குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். இனி இவ்வாறு நிகழாதவாறு தேர்தல் ஆணையமும் காவல்துறையும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மமதா பானர்ஜி அவர்கள் விரைந்து நலம்பெற விழைகிறேன் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon