--- --:--:-- --

7.5% இடஒதுக்கீடு சட்டம் இயற்றப்பட்டது ஏன்?

6

அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் சம வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கிய சட்டம் இயற்றப் பட்டதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

 

தமிழகத்தில் மருத்துவ படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு சட்டம் இயற்றியுள்ளது. இந்த சட்டத்தை எதிர்த்து தனியார் பள்ளி மாணவர்கள் சிலரும் அரசு பள்ளி மாணவர்களைப் போல அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என கோரி தமிழ்நாடு கத்தோலிக்கக் கல்வி சங்கமும் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

 

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார், ராமமூர்த்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்த போது தமிழக அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

 

அதில் இந்த சட்டத்தை இயற்ற அரசுக்கு அதிகாரம் இருப்பதாகவும் அரசு பள்ளி மாணவர்களுக்கு சம வாய்ப்பு வழங்கும் வகையில் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய விரிவான ஆய்விற்குப் பிறகு இந்த சட்டம் ஏற்றப்பட்டது என்றும் விதிமீறல் இல்லாதபோது அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

மேலும் சட்டம் கொண்டு வந்ததற்கான நோக்கம் குறித்து மனுதாரர்கள் தவறான குற்றச்சாட்டுகளை முன்வைத்து இருப்பதால் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. இந்த பதில் மனுவுக்கு விளக்கம் அளிக்க மனுதாரர் தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது. வழக்கு 4 வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon