சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏபி சாகிக்கு கொரொனா பாசிடிவ்..!
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏபி சாகிக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சாகி வழக்கம்போல் நேற்று நேரடியாகவும், காணொளி மூலமாகவும் வழக்குகளை விசாரித்தார்.
நீதிமன்ற நேரம் முடிந்த பிறகு மாலையில் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் அமைக்கப்பட்டுள்ள நீதிமன்றத்தின் திறப்பு விழா நிகழ்வில் காணொளி மூலம் தலைமை நீதிபதி சாகி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் இந்த நிகழ்வில் 10 நிமிடங்கள் மட்டுமே கலந்து கொண்டு கிளம்பியதாக கூறப்படுகிறது. ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு சென்று கொரொனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அவருக்கு நோய் தொற்று இருந்தது தெரியவந்தது. இதையடுத்து உள்நோயாளியாக தலைமை நீதிபதி சாகி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தலைமை நீதிபதி உடல்நிலை சீராக இருப்பதாகவும் லேசான அறிகுறிகள் மட்டும் இருப்பதாகவும் கூறப்படுகிறது. மருத்துவ நிபுணர்கள் குழு அவருக்கு தேவையான சிகிச்சையை வழங்கி வருகிறது.






