“தேனியை விட்டு நகர மறுக்கும் ஓபிஎஸ்!” 7-ந் தேதி திட்டமிட்டபடி முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு வெளியாகுமா? அதிமுகவில் பெரும் குழப்பம்!!

Publish by: செய்திப் பிரிவு --- Photo : கோப்பு படம்


முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் அதிமுகவில் நாளுக்கு நாள் குழப்பம் கூடிக் கொண்டே செல்கிறது. இதனால் திட்டமிட்டபடி 7-ந் தேதி அறிவிப்பு வெளியாகுமா? என்பது சந்தேகமாகியுள்ளது.

 

அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அனைவரும் இன்று முதல் 3 நாட்களுக்கு சென்னையில் இருக்க முதல்வர் எடப்பாடி அறிவுறுத்தியிருந்தாலும் அதனை ஓபிஎஸ்சும் அவரது ஆதரவு அமைச்சர்கள் சிலரும் புறந்தள்ளி விட்டு பெரியகுளத்தில் தொடர் ஆலோசனையில் ஈடுபட திட்டமிட்டுள்ளதால் அதிமுகவில் உச்சகட்ட குழப்பம் நிலவுகிறது.

 

தற்போதைய அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பெரும்பான்மையினர் தம் பக்கம் இருப்பதை பயன்படுத்தி கட்சியிலும், ஆட்சியிலும் தமது அதிகாரத்தை ஸ்ட்ராங் ஆக்க பார்க்கிறார் முதல்வர் எடப்பாடி . ஆனால், தற்போது கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற அதிகாரத்தில் உள்ள துணை முதல்வர் ஓபிஎஸ், அவ்வளவு சீக்கிரத்தில் இதற்கு மசிய மாட்டேன் என்பது போல் இபிஎஸ் தரப்புக்கு போக்கு காட்டத் தொடங்கியுள்ளார்.

 

3 ஆண்டுகளுக்கு முன் அணிகள் இணைப்பின் போது கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றாமலும், தம்மை மட்டம் தட்டுவதிலும் குறியாக இபிஎஸ் தரப்பு இருந்ததை ஓபிஎஸ் மனம் நொந்தபடி அமைதி காத்தே வந்ததாக கூறப்படுகிறது. கட்சியில் 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு அமைக்காதது, தனது ஆதரவாளர்களுக்கு கட்சியிலும் ஆட்சியிலும் பொறுப்புகள் வழங்காமல் போக்கு காட்டியது, எதற்கெடுத்தாலும் தங்கமணி, வேலுமணி போன்றோரே முக்கியத்துவம் பெற்றது எல்லாவற்றையும் ரசிக்காத ஓபிஎஸ் ரொம்பவே அமைதி காத்து வந்துள்ளதாக தெரி சிறது.

 

சட்டசபைக்கு தேர்தல் நெருங்கும் வேளையில், இன்னும் அமைதி காத்தால் தம்மை இபிஎஸ் தரப்பு ஒரேயடியாக கிளீன் போல்டு செய்து விடும் என்ற மனநிலைக்கு வந்து விட்ட ஓபிஎஸ் தனக்கு இதுதான் கடைசித் தருணம் என்ற முடிவுக்கு வந்து விட்டதாகவே தெரிகிறது.

 

செயற் குழுவில் எடப்பாடிக்கு அமோக ஆதரவு இருந்தாலும், தனக்குள்ள ஒருங்கிணைப்பாளர் என்ற அதிகாரத்தை பயன்படுத்தி முதல்வர் வேட்பாளராக இபிஎஸ்சை அறிவிக்கும் முடிவுக்கு ஓபிஎஸ் முட்டுக்கட்டை போட்டு விட்டார். இப்போது 7-ந் தேதி முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு என்று கூறப்பட்டாலும், அதற்கு முன் தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொள்ள ஓபிஎஸ் படு தீவிரமாகி விட்டார் என்றே கூறலாம்.

 

ஓபிஎஸ் பிடிவாதம்

இபிஎஸ்சை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க ஓபிஎஸ் சம்மதித்து விட்டாலும், முதலில் 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு, தமக்கு கட்சியில் முழு அதிகாரம் எடுக்கும் ஒற்றைத் தலைமை பதவி போன்றவற்றை முதலில் முடிவு செய்தால் மட்டுமே இறங்கி வருவேன் என்று ஓபிஎஸ் பிடிவாதம் பிடிப்பதாக தகவல்கள் வெளிவருகின்றன . இதற்காகவே சென்னையில் இருந்து சொந்த ஊரான பெரியகுளத்திற்கு சென்று 3 நாட்களாக ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் தொடர்ந்து தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

 

முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு 7-ந் தேதி என கூறப்பட்ட நிலையில், இன்னும் 2 நாட்களே உள்ளது. இதையடுத்து அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அனைவரையும் இன்று முதல் 3 நாட்களுக்கு சென்னையில் இருக்குமாறு முதல்வர் எடப்பாடி கூறியுள்ள நிலையில், தனது முடிவில் பிடிவாதமாக இருக்கும் ஓபிஎஸ் அடுத்த 3 நாட்களுக்கு சென்னை பக்கம் செல்ல மாட்டார் என்றே தகவல்கள் வெளியாகி உள்ளன.

 

தேனி மாவட்டத்தில் ஒரு சில அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் ஓபிஎஸ், தனது ஆதரவு அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் ஆகியோருடன் பண்ணை வீட்டில் தொடர் ஆலோசனை மேற்கொள்ள முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அதிமுகவில் மேலும் குழப்பம் அதிகரித்தே வருகிறது. எனவே 7-ந் தேதி முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு திட்டமிட்டபடி வெளியாகுமா? அல்லது கட்சியில் கலகம் அதிகரிக்குமா? என்ற பதற்றத்தில் அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் உள்ளனர்.


Leave a Reply