சென்னை திருவான்மியூர் சாலையில் திடீர் பள்ளம் விழுந்தது ஏன்?
சென்னை திருவான்மியூர் அருகே சாலையில் திடீரென விழுந்த பள்ளத்தில் கார் கவிழ்ந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. திருவான்மியூர் டைடல் பார்க் அருகே ஓஎம்ஆர் சாலையில் தற்போது மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. சென்னை திருவான்மியூர் அருகே ராஜீவ் காந்தி சாலையில் இன்று காலை சுமார் 10.45 மணியளவில் திடீரென பள்ளம் ஏற்பட்டது.
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-ம் கட்டத்தில், 3-வது வழித்தடத்திற்காக திருவான்மியூரில் இருந்து தரமணி நோக்கி சுரங்கம் தோண்டும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், திருவான்மியூர் ஷாஃப்ட்டில் இருந்து சுமார் 30 மீட்டர் தொலைவில் இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளது.
அப்போது அந்த வழியாக சென்ற கார் பள்ளத்தில் சிக்கியது. காரை ஓட்டி வந்தவர் அதிர்ஷ்டவசமாக பாதுகாப்பாக உள்ளார். பள்ளத்தில் விழுந்த காரும் மீட்கப்பட்டுள்ளது.
தற்போது பள்ளத்தை கான்கிரீட் மூலம் நிரப்பும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், சம்பவ இடத்தில் தேவையான பாதுகாப்பு மற்றும் தளப் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சம்பவம் தொடர்பாக தொழில்நுட்ப ரீதியான ஆய்வும் நடைபெற்று வருகிறது. மெட்ரோ ரயில் பணிகளின் காரணமாக சாலையில் பள்ளம் விழுவதாக கூறப்படும் நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே அக்டோபர் 11 ஆம் தேதி சென்னை வரும் பிரதமர் மோடி மெட்ரோ ரயில் 2-ம் கட்டத் திட்டப்பணிகளின் ஒரு பகுதியாக நிறைவடைந்துள்ள பூந்தமல்லி – வடபழனி வரையிலான 14.64 கி.மீ. தொலைவிலான மெட்ரோ ரயில் சேவையைத் தொடங்கி வைக்கிறார். பூந்தமல்லி மெட்ரோ நிலையத்தில் நடைபெறும் நிகழ்வுக்குப் பிறகு, பிரதமர் மோடியும், முதல்வர் விஜய்யும் பூந்தமல்லியில் இருந்து போரூர் வரை மெட்ரோ ரயிலில் இணைந்து பயணம் செய்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





