கொரோனா தொற்று பாதிப்பு : அமெ.அதிபர் டிரம்ப் ராணுவ மருத்துவமனையில் அனுமதி

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தனி அறையில் தம்மை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக அறிவித்த அமெரிக்க அதிபர் டிரம்புக்கு காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

கொரோனா தொற்று பாதிப்பில் உலக அளவில் நெம்பர் ஒன் இடத்தில் அமெரிக்கா உள்ளது. இந்த கொரோனா பரவல் இன்னும் குறையாத நிலையிலும் அந்நாட்டில் திட்டமிட்டபடி நவம்பர் 3-ந்தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் போட்டியிடும் நிலையில் இருவரும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். கடந்த வாரம் நேருக்கு நேர் விவாதத்திலும் இருவரும் பங்கேற்றனர்.

 

இந்நிலையில் டிரம்ப்பின் அரசியல் ஆலோசகருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், தொடர்பில் இருந்த டிரம்ப் உள்ளிட்ட அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் டிரம்ப், அவருடைய மனைவி மெலோனியா இருவருக்கும் தொற்று உறுதியாகி, இருவரும் தங்களை தனிமைப் படுத்திக் கொண்டுள்ளதாக டிரம்ப் டுவீட் செய்திருந்தார்.

 

இந்நிலையில் வெள்ளை மாளிகையில் தனி அறையல் தனிமைப்படுத்தப்பட்டிருந்த டிரம்ப்புக்கு காய்ச்சல் அதிகமானதால் அவர் நேற்றிரவு ஹெலிகாப்டர் மூலம் ராணுவ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். தற்போது டிரம்ப் உடல் நிலை சீராக உள்ளதாகவும், ஒரிரு நாட்கள் மருத்துவமனையில் இருந்தபடியே தமது வழக்கமான பணிகளை கவனிப்பார் என்றும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

 

 

அதிபர் தேர்தல் நேரத்தில் டிரம்ப் உடல் நிலை பாதிப்பு செய்தி அமெரிக்கர்களை கவலையடையச் செய்துள்ளது. இந்நிலையில் டிரம்ப் விரைவில் குணமடைய வேண்டும் என இந்திய பிரதமர் மோடி உள்ளிட்ட உலகத் தலைவர்கள் பலரும் நலம் விசாரித்து வருகின்றனர்.


Leave a Reply