பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பை கண்டித்து கண்டன உரை..!

Publish by: மகேந்திரன் --- Photo :


பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் இராமநாதபுரம் (தெற்கு) மாவட்டம் சார்பில் சந்தை திடலில் தெற்கு மாவட்ட தலைவர் ஏ.முகமது அயூப் கான் தலைமையில் நடைபெற்றது.

 

மாநில துணை தலைவர் பா அப்துல் ரஹ்மான் கண்டன உரையாற்றி பேசியதாவது: குற்றவாளிகள் பாபர் மசூதியை இடிப்பதற்கு முன் கூட்டியே திட்டமிடவில்லை, சதி செய்யவில்லை என்று குற்றவாளிகள் அனைவரையும் விடுதலை செய்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது மிகப்பெரிய ஜனநாயகப் படுகொலையாகும்.

 

நீதிமன்றங்களின் மீதான நம்பிக்கையை இது தகர்த்துள்ளது. பாபர் மசூதி இட வழக்கில் எவ்வாறு சட்டத்தின்படி தீர்ப்பு வழங்கப்படவில்லையோ, அதுபோன்ற அடிப்படையில்தான் இப்போதும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் சிறுபான்மை மக்களுக்கு எதிராக நீதிமன்றங்களில் வழங்கப்படும் தீர்ப்புகள் எந்த நிலையில் இருக்கின்றன என்பதை இந்தியா மட்டுமல்ல ! ஒட்டுமொத்த உலகமும் பார்த்துக் கொண்டிருக்கின்றது.

பாபர் மசூதி இடிக்கப்பட்ட நிலையில் அந்த இடம் அதை இடித்தவர்களுக்கே சொந்தமென்று சொன்னதும், அதை இடித்த குற்றவாளிகள் அனைவரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளதும் தான் இந்திய நீதிமன்றத்தின் நீதியற்ற தீர்ப்புகளுக்கு உதாரணமாகும்.

 

பாபர் மசூதி நிலத்திற்கு உரிமை கோரும் ஆவணங்கள் இஸ்லாமியாகளிடத்திலேயே நிறைந்திருந்தாலும், கூட்டு மனசாட்சி அடிப்படையில் அதை இடித்தவர்களுக்கே நிலம் சொந்தம் என்று தீர்ப்பளித்து ஒட்டுமொத்த இந்திய மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது உச்சநீதிமன்றம் பாபர் மசூதியை இடித்தவர்கள் யார் ? என்று உலகத்திற்கே தெரிந்திருந்தும், மசூதி இடிப்பு குறித்து குற்றவாளிகள் பல்வேறு சுய வாக்குமூலங்கள் அளித்திருந்த போதிலும், பாபர் மசூதி இடிப்பு குற்றவாளிகள் திட்டமிட்டு மசூதியை இடிக்கும் பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் நிறைந்திருக்கும் நிலையிலும் கடந்த 28 ஆண்டுகளாக அந்த வழக்கின் விசாரணை நடைபெற்று குற்றவாளிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டிருப்பது இந்திய நீதிமன்றங்களின் மீதான நம்பிக்கையை தகர்த்து விட்டது.

 

இந்தியாவில் வாழும் இஸ்லாமியர்கள் இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும், ஜனநாயகத்தின் மீதும், நீதிமன்றங்களின் மீதும் எப்போதுமே நம்பிக்கையாகவே இருந்து வந்தார்கள் ஆனால் நீதிமன்றங்களில் வழங்கப்படும் தீர்ப்புகள் இஸ்லாமியர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய மக்களும் நீதிமன்றத்தின் மீது கொண்டிருக்கும் நம்பிக்கையை தகர்க்கும் வகையிலேயே அமைந்துள்ளது பாபர் மசூதியை இடித்தவர்கள் யார் ? என்பது உலகத்திற்கே தெரிந்திருந்தும் போதிய ஆதாரங்கள் இல்லை என்று நீதிமன்றங்கள் கூறுவது மிகப் பெரும் அநீதியாகும். பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பு இந்திய ஜனநாயகத்தையும், அரசியலைப்புச் சட்டத்தையும் சிதைத்து சீர்குலைத்து விட்டது. என பேசினார்.

 

மாவட்ட செயலாளர் ஜெ.எம்.ஆரிப் கான், பொருளாளர் ரஹ்மான் அலி, துணை தலைவர் முஹமது பஷீர், துணை செயலாளர்கள் மன்சூர் ஜியாவுல் ஹக், சுல்தான், தஸ்தகீர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Leave a Reply