“அமெ. அதிபர் டிரம்புக்கும் மனைவி மெலேனியாவுக்கும் கொரோனா உறுதி!!” தேர்தலுக்கு ஒரு மாதமே உள்ள நிலையில் பிரச்சாரத்தில் சிக்கல்!!

Publish by: செய்திப் பிரிவு --- Photo : கோப்பு படம்


மெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலோனியா இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிபர் தேர்தலுக்கு இன்னும் ஒரு மாத இடைவெளி உள்ள நிலையில் டிரம்ப், கொரோனா பாதிப்புக்கு ஆளாகி தனிமைப்படுத்திக் கொண்டுள்ளது அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா தொற்றால் அதிக பாதிப்புக்கு ஆளாகி முதலிடத்தில் இருப்பது அமெரிக்கா தான். உயிரிழப்பிலும் அமெரிக்கா தான் டாப் இடத்தில் உள்ளது. அமெரிக்காவில் கொரோனா தொற்று பரவத் தொடங்கிய காலம் முதல் அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப், கொரோனா தொடர்பாக தொடர்ந்து பல்வேறு சர்ச்சை கருத்துக்களை கூறி சர்ச்சைகளில் சிக்கி வந்தார்.

 

முதலில் கொரோனா வைரஸை சீன வைரஸ் என குறிப்பிட்டார். அப்புறம் மாஸ்க் அணிய மாட்டேன் என்று கூறி பொது வெளியில் நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். தற்போது அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில்,தேர்தல் பிரச்சாரத்தில் கொரோனா விஷயத்தில் முழுத் தகவல்களை இந்தியா, ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் வெளியிடவில்லை என்ற பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தார்.

 

அமெரிக்காவில் கொரோனா தொற்று பரவல் வேகம் சற்று தணிந்துள்ள நிலையில் அந்நாட்டு அதிபர் தேர்தல் திட்டமிட்டபடி நவம்பர் 3-ந்தேதி நடைபெற உள்ளது. மீண்டும் போட்டியிடும் டிரம்ப்பை எதிர்த்து முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் களம் காண்கிறார். தேர்தலுக்கு சரியாக இன்னும் ஒரு மாதம் உள்ள நிலையில் தற்போது இருவரும் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

 

அமெரிக்காவில் அதிபர் தேர்தலில் போட்டியிடுவோர் பொதுமக்கள் முன்னிலையில் ஒரே மேடையில் நேருக்கு விவாதம் நடத்தும் நிகழ்ச்சிகளும் நடைபெறுவது வழக்கம். அதன்படி முதல் நேருக்கு நேர் விவாதம் கடந்த வாரம் நடைபெற்றது. இதில் இருவருமே காரசாரமாக மோதிக் கொண்டு, தனிநபர் தாக்குதலிலும் ஈடுபட்டது பெரும் பரபரப்பானது.

 

இந்நிலையில் தான் டிரம்ப்புக்கும் நேற்று திடீரென கொரோனா பரிசோதனை நடத்தப்பட்ட நிலையில் அதன் முடிவுகள் வெளியானதில், தமக்கும் மனைவி மெலோனாவுக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக டிரம்ப் டுவீட் செய்துள்வார். தாங்கள் இருவரும் கோவிட் 19 தொற்று பாதிப்பு நடைமுறைகள் படி வீட்டில் தனிமைப் படுத்திக் கொண்டதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.

 

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ளது. இந்நிலையில், கொரோனா பாதிப்பு காரணமாக டிரம்ப் தம்மை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளது பிரச்சாரத்தில் தொய்வு ஏற்படும் என்பதால் அமெரிக்காவில் பரபரப்பான விவாதமாகியுள்ளது.


Leave a Reply