மகாத்மா காந்தியின் பிறந்த நாளையொட்டி தலைவர்கள் மரியாதை செலுத்தினர்..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


காத்மா காந்தியின் பிறந்த நாளையொட்டி அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை செலுத்தினர். டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

 

காந்தி ஜெயந்தி அன்று வழக்கமாக ராஜ்காட்டில் நடத்தப்படும் சிறப்பு நிகழ்ச்சிகள் கொரொனா தொற்று காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. காந்தியின் பிறந்தநாளையொட்டி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் காந்திய சிந்தனைகள் உலக நலனுக்காக பாதையை அமைக்கிறது என்று மகாத்மா காந்தி மனித குலத்திற்கு உத்வேகம் அளிப்பவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 

பிளேக் நோய் பரவிய போது மகாத்மா காந்தி தன்னலமில்லாமல் சேவையாற்றினார் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். இதேபோல காந்தியின் வாழ்க்கை மற்றும் உன்னத எண்ணங்களில் இருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது என பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

 

மகாத்மா காந்தியின் பிறந்தநாளையொட்டி ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர் நேசத்திற்குரிய மகாத்மா காந்தியை தலை வணங்குவோம் என குறிப்பிட்டுள்ளார். வளமான இந்தியாவை உருவாக்க காந்தியின் கொள்கைகள் வழி காட்டுவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

 

தேசப்பிதா வின் பிறந்தநாளையொட்டி அவரது பொன்மொழிகளை நினைவு கூர்ந்துள்ளார் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி. உலகில் யாருக்கும் அஞ்ச மாட்டேன் யாருடைய அநீதிக்கு தலை வணங்க மாட்டேன், பொய்யை உண்மையுடன் வெல்வேன், பொய்யை எதிர்க்கும் போது எல்லா துன்பங்களையும் தாங்கிக் கொள்ள முடியும் என்ற காந்தியின் மொழிகளை ராகுல் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

தேசப்பிதா மகாத்மா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் அவரது உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினர். காமராஜர் சாலையில் உள்ள காந்தி சிலை கீழே வைக்கப்பட்ட அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். காந்தி கொள்கைகளை நினைவு கூறும் விதமாக ராட்டையில் நூல் நூற்றல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் இணைக்கப்பட்டுள்ளன.


Leave a Reply