--- --:--:-- --

என்னத்த சொல்ல…? “மறைந்த எஸ்.பி.பி.க்கு பதிலாக உயிருடன் இருக்கும் அதிமுக எம்.பி., எஸ்.ஆர்.பிக்கு இரங்கல்” அமைச்சர் செல்லூராரின் அடுத்த உளறல்!!

nnn

மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவு குறித்து கேட்டதற்கு உயிருடன் உள்ள அதிமுக எம்பி எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியத்துக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ இரங்கல் தெரிவித்தது சலசலப்பாகியுள்ளது. செல்லூர் ராஜுவின் தெர்மா கோல் மேதாவித்தனம் முதல் அடுத்தடுத்து தொடரும் உளறல்கள் என்னத்த சொல்ல.. என்ற ரகமாகி வருகிறது.

 

ஜெயலலிதா இருந்த போது அதிமுகவில் அமைச்சர்கள் முதல் நிர்வாகிகள் வரை மீடியா முன் எந்த ஒரு கருத்துச் சொல்லவும் பம்முவார்கள். நமக்கேன் வம்பு என என்ன கேள்வி கேட்டாலும், எல்லாம் அம்மாதான் என ஒரு பெரிய கும்பிடு போட்டு விட்டு செல்வதையே அத்துனை பேரும் வழக்கமாக்கி கப்சிப் என இருந்தார்கள்.

 

ஆனால், ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் தான் அதிமுகவின் பெரும்பான்மை அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளின் சுய அறிவு இவ்வளவுதான் போலும் என்ற அளவுக்கு வெட்ட வெளிச்சமாகி வருகிறது. இதனால் தான் ஜெயலலிதாவும் இவர்களை வாய் திறக்க விடாமல் வைத்திருந்தார் போலும் என்ற உண்மை தெரிய வருகிறது. அந்த அளவுக்கு அமைச்சர்கள் சிலரின் உளறல், அதி மேதாவித்தனம் எல்லாவற்றையும் பார்த்து கேலியாக சிரிக்க வேண்டியுள்ளது.

 

தெர்மா கோல் விஞ்ஞானி என்ற பட்டம்

இதில் கூட்டுறவு அமைச்சர் செல்லூர் ராஜூவின் அடுத்தடுத்த உளறல்கள், பேச்சுக்கள், அதி மேதாவித்தனமான செய்யும் கூத்துக்கள் எல்லாமே ஒரு தனி ரகமாகவே உள்ளது எனலாம். எப்போது வைகை அணையில் நீர் ஆவியாவதைத் தடுக்கிறேன் பேர்வழி என தெர்மா கோல்களை அணையில் பரப்பினாரோ, அப்போது முதலே அவருக்கு தெர்மா கோல் விஞ்ஞானி என்ற பட்டம் கொடுத்து, நெட்டிசன்கள் மீம்ஸ்களை தெறிக்க விட்டனர். தமிழகத்தில் மீம்ஸ்களுக்கு கதாநாயகன் வைகைப்புயல் வடிவேல் என்றால் அதை மிஞ்சும் அளவுக்கு அமைச்சர் செல்லூராரும் அடிக்கடி ஜோக்கராக மாறிவிடுகிறார்.

 

இந்த கொரோனா காலத்தில் சானிடைசருக்கு பதில் சானிட்டரி நாப்கின் என்று கூறி விலா நோக சிரிக்க வைத்தார். அடுத்து உலகமே கொரோனா பீதியில் மாஸ்க் அணிந்து உலா வரும் வேளையில், கொரோனாவுடன் வாழப் பழகிக் கொள்ள வேண்டும். மாஸ்க் தேவையில்லை என்பது போல பேசி அடுத்த சர்ச்சையில் சிக்கினார். இத்தனைக்கும் செல்லூராரும், அவருடைய மனைவியும் கொரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாகி சிகிச்சைக்குப் பின் மீண்டவர்கள் ஆவர்.

 

சமீபத்தில் இவர் கூறிய ஒரு கருத்து அதிமுகவிலேயே ஒரு பெரும் பிளவையே ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு சென்றதுதான் ஹைலைட். அடுத்து வரும் தேர்தலில் அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார்? என்ற கேள்விக்கு எம்எல்ஏக்கள் கூடி முதல்வர் தேர்வு செய்யப்படுவார் என்று கூறியது தான் அதிமுகவில் பெரும் மோதல் வெடிக்கும் அளவுக்குச் செல்ல, பின்னர் இனிமேல் முதல்வர் வேட்பாளர் பற்றி வாயே திறக்க மாட்டேன் என்று பல்டி அடித்தார்.

 

அமைச்சர் செல்லூராரின் அடுத்த உளறல்

 

இப்போது உயிருடன் இருக்கும் தன் கட்சியின் எம்.பி. ஒருவருக்கே, அவர் இறந்து விட்டதாக நினைத்து செல்லூரார் இரங்கல் தெரிவித்தது தான் பெரும் சலசலப்பை ஏற்படுத்திவிட்டது. மறைந்த பின்னணி பாடகர் எஸ்பி.பாலசுப்பிரமணியத்துக்கு பதில், உயிருடன் உள்ள அதிமுக எம்.பி எஸ்.ஆர்.பாலசுப்ரமணியத்திற்கு அமைச்சர் செல்லூர் ராஜு இரங்கல் தெரிவித்தது தான் பகீர் ரகம்.

 

திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், எஸ்.பி.பி மறைவு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் தான் இறந்ததாக நினைத்து, அம்மாவின் அன்பையும் ஆதரவையும் பெற்றவர் அவர் அமைச்சர் செல்லூரார் புகழாரம் சூட்டினார்.

எஸ்.பி.பி. பற்றி கேட்டால், எஸ்.ஆர்.பி.க்கு இரங்கல்

 

அத்தோடு, ஜெயலலிதா மீது பொய் வழக்கு பதிவு செய்த போது எதிர்க்கட்சியில் இருந்த போதும் அம்மாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்தவர் எஸ்.ஆர்.பி என்று செல்லூரார் கூறிக் கொண்டே செல்ல, என்ன நாம் எஸ்.பி.பி. பற்றி கேட்டால், எஸ்.ஆர்.பி.க்கு இரங்கல் கூறுகிறாரே அமைச்சர் என்று செய்தியாளர்கள் கிறுகிறுத்துப் போய் விட்டனர்.

 

அப்போது தான் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சுதாரித்து இடையே குறுக்கிட்டு, உயிரிழந்தது எஸ்பிபி என செல்லூராருக்கு ஞாபகப்படுத்தினார். உடனே ஐயயோ நான் எஸ்.ஆர்.பி. என்று நினைத்து கூறிவிட்டேனே என்று மழுப்பிய அமைச்சர் செல்லூரார், எஸ்.பி.பி.யின் புகழைப் பாடி சமாளித்தாலும், அமைச்சர் செல்லூரார் அடுத்து தேர்தல் வர உள்ள நிலையில் வெள்ளந்தி தனமாக இன்னும் என்னென்ன மாதிரி உளறப் போகிறாரோ? என்னத்த சொல்ல.. ? என்ற அளவுக்கு உள்ளது அவரது நகைச்சுவை காட்சிகள் என்றே தெரிகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon