“புதிய கல்விக் கொள்கை 2020” ஒப்புதல் வழங்கியது மத்திய அமைச்சரவை!!
திருத்தங்களுடன் கூடிய புதிய கல்விக் கொள்கை 2020-க்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. பிரதமர் மோடி தலைமையில் கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த ஒப்புதல் வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்றவுடன், தேசிய அளவில் புதிய கல்விக் கொள்கை உருவாக்க திட்டமிடப்பட்டது. இது குறித்து ஆராய்வதற்காக கடந்த 2017-ல் இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையில் நிபுணர் குழு அமைக்கப்பட்டது.

இந்தக் குழு கடந்த 2019-ம் ஆண்டு ஜூனில் தேசிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையை வெளியிட்டது. இதில் பள்ளிகளில் இந்தி கட்டாயம் என்ற மும்மொழி கொள்கைக்கு தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் கடும் எதிர்ப்புகள் எழுந்தன. இதனால் இந்தி கட்டாயம் என்பது நீக்கப்பட்டு புதிய வரைவுக் கொள்கையை இக்குழு திருத்தி வெளியிட்டது.
மேலும் இந்த புதிய வரைவுக் கொள்கை குறித்து பொதுமக்களின் ஆலோசனை கேட்க முடிவு செய்யப்பட்டு கடந்தாண்டு ஆகஸ்ட் 15-ந் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது.நாடு முழுவதும் கல்வியாளர்கள், பொதுமக்கள் என 2 லட்சத்திற்கும் அதிகமானோர் தங்கள் கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.
“தொடர்ந்து மக்களின் கருத்துக்களை ஆய்வு செய்ய 15 நபர் குழு அமைக்கப்பட்டு வரைவு அறிக்கையில் என்னென்ன மாற்றங்கள் தேவை என்பது குறித்து மத்திய அரசுக்கு இந்தக் குழு அறிக்கையை வழங்கியது”
புதிய கல்விக் கொள்கை
இந்நிலையில், இன்று காலை பிரதமர் மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய கல்விக் கொள்கையின் திருத்தப்பட்ட வரைவு அறிக்கைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் பெயரை மாற்றவும் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இனிமேல் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் பெயர் மாற்றப்பட்டு, மத்திய கல்வித்துறை அமைச்சகம் என்று அழைக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




